மறதி நோய்க்கு மருந்தாகுமா வயகரா?
ஆண்மை குறைவு பிரச்னைக்கு மருந்தாக எடுத்துக் கொள்ளப்படும் வயகராவை, அல்சைமர்ஸ் நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வயாகரா மருந்து மூளையில் என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என இவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
அல்சைமர்ஸ் போன்ற டிமென்ஷியாவினால் திரளும் புரதங்களை, வயகரா மருந்து இலக்கு வைப்பதாக, உயிரணுக்களை பரிசோதனை செய்ததன் மூலம் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சுமார் 70 லட்சம் நோயாளிகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்த க்ளீவ்லேண்ட் அணி, வயகரா மருந்து எடுத்துக் கொள்ளும் ஆண்கள், அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் குறைவாக உள்ளது என கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பான ஆய்வுகள் மதிப்பு வாய்ந்தது என இந்த ஆராய்ச்சியாளர்கள் நேச்சர் ஏஜிங்' என்கிற சஞ்சிகையில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில் கூறியுள்ளனர்.
இது போன்ற ஆய்வுப் பணிகள் மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளன என நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் மருந்தை வேறு ஒரு தேவைக்கு பயன்படுத்துவது விரைவானது, எளிமையானது, புதிய மருந்தைக் கண்டுபிடிப்பது மற்றும் புதிய சிகிச்சை முறையைக் கண்டுபிடிப்பதை விட விலை மலிவானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆரம்பத்தில் வயகரா (சில்டெனாஃபில்) மருந்து இதய நோய்க்கான மருந்தாகத்தான் வடிவமைக்கப்பட்டது. இந்த மருந்து ரத்த நாளங்களை விரிவாக்கி ரத்த ஓட்டத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டது.
இந்த மருந்து இதயம் மட்டுமின்றி, ஆணுறுப்பில் உள்ள ரத்த தமனிகளுக்கும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். பிறகு ஆணுறுப்பு விரைப்புத்தன்மைப் பிரச்னைக்கான மருந்தாக மேம்படுத்தப்பட்டது.
ஆனால் நிபுணர்களோ இம்மருந்துக்கு மற்ற பயன்பாடுகளும் இருப்பதாகக் கருதினர். சில்டெனாஃபில் மருந்து ஆண் மற்றும் பெண்களுக்கு பல்மொனெரி ஹைப்பர்டென்சன் எனப்படும் நுரையீரல் பிரச்னைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இம்மருந்து அல்சைமர்ஸ் நோய்க்கும் பயன்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.