சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் 09-12-2021
ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில், 2003ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி ஐ.நா. சபையால் டிசம்பர் 9ம் நாள் சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, அன்று முதல் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊழலை தடுப்பதோடு அதுகுறித்து விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் ஊழல் எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்து ஆண்டுதோறும் ஆய்வு செய்யும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, ஒரு நாட்டின் நிர்வாக வெளிப்படைத்தன்மை, அந்த நாட்டில் லஞ்சம், ஊழல் மற்றும் நடைபெறும் முறைகேடுகள் போன்றவற்றைக் காரணிகளாகக் கொண்டு ஆய்வுகள் நடத்துகிறது.
இந்த ஆய்வின் மதிப்பீடுகளை வைத்து ஊழல் அதிகம் உள்ள நாடுகளை அந்த அமைப்பு பட்டியலாக வெளியிடுகிறது. ஆய்வின் அடிப்படையில் 100 மதிப்பெண்ணைப் பெறும் நாடு ஊழலற்ற நாடு என்றும், மதிப்பெண் எதுவும் பெறாமல் இருக்கும் நாடு ஊழல் அதிகமுள்ள நாடு என்றும் அர்த்தம்.
இந்தியாவைப் பொறுத்தவரை 2016ல் 40 மதிப்பெண்ணைப் பெற்று 79வது இடத்திலும், 2017ல் அதே 40 மதிப்பெண்ணைப் பெற்றிருந்த போதிலும், 81வது இடத்தையும் பிடித்தது. 2018ல் 41 மதிப்பெண்ணுடன் ஊழல்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா 78வது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் அரசு சார்ந்த வேலையை முடிக்க இரண்டில் ஒருவர் லஞ்சம் கொடுக்கிறார். லஞ்சம் வாங்காமல், ஊழல் செய்யாமல் நேர்மையாக இருக்க விரும்பும் நபர் இந்த சமூகத்தில் சந்திக்கும் பிரச்னைகளும், மனவேதனையும் அதிகமாக உள்ளது. அந்த நபரைக் காட்டிலும் அவரது குடும்பத்தினரின் நிலை மிகவும் பரிதாபமானதாகவே உள்ளது.
அரசு சேவைகளை காலதாமதமின்றி விரைவாக பெறுவதற்கு லஞ்சம் அல்லது அன்பளிப்பு கொடுப்பது பெரிய தவறில்லை என்கிற மனநிலைக்கு பொதுமக்கள் மாறிவிட்டனர். இந்த மனநிலை தங்கள் கடமையை செய்வதற்கு லஞ்சம் பெறுவதை பொதுமக்கள் அங்கீகரித்து விட்டனர் என்ற உணர்வை லஞ்சம் வாங்குபவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சமும், ஊழலும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கிறது. எனவே லஞ்சம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர் சமுதாயத்திடம் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடமும், பெற்றோரிடமும் உள்ளது.
சிறுவயது முதலே நேர்மையாக இருக்க கற்றுக் கொடுத்தால் இனிவரும் சமுதாயமாவது ஊழலற்றதாக இருக்கும். ஒரு நாட்டில் ஊழல் இல்லையென்றால் அது உலகிற்கே வழிகாட்டியாக உயர்வது சாத்தியம்.