குடிப் பழக்கத்தினை மறக்க முடியவில்லையா?
குடி குடியைக் கெடுக்கும் என்பது பழமொழி. ஒரு குடிகாரனால் ஒரு குடி அதாவது குடும்ப வாழ்க்கையே சீரழியும் நிலைக்கு வரலாம் என்பதையே இது எடுத்துக் கூறுகிறது.
மதுப்பழக்கத்திலிருந்து ஒருவரால் விடுபட முடியுமா? இந்த கேள்விக்கு நிச்சயமாக முடியும் என்பதே சரியான பதில். மதுவின் உச்சம் தொட்டு, உண்மைகள் அறிந்து, உளப்பூர்வமாகவே அதை மறக்க நினைக்கும் மனிதர்களுக்கு பல்வேறு மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் பெரிதும் உதவுகின்றன. அதற்கு வீட்டில் இருப்போரின் உறுதுணை அவசியம். நண்பர்களின் ஆதரவும் அவசியம். அதோடு, சம்பந்தப்பட்ட நபரின் உறுதியான கட்டுப்பாடு மிகமிக அவசியம்.
குடி மறக்க என்ன சிகிச்சை?
சிகிச்சைக்காக வருபவர்களில், மிதமான குடிகாரர்கள் எனில் ஒரு மாதம் சிகிச்சை தேவைப்படும். மொடாக் குடிகாரர்களாக இருந்தாலோ மூன்று மாதம் வரை தங்கியிருந்து சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும். முதலில் மதுவினால் குடிகாரரின் உடலில் சேர்ந்துவிட்ட நச்சுத்தன்மையைப் போக்கி, ஆரோக்கியத்தை மீட்க சிகிச்சை அளிக்கிறார்கள். அதோடு மனநல ஆலோசனை (கவுன்ஸிலிங்), உரை நிகழ்ச்சிகள், தியானம் என பலவித முறைகள் கையாளப்படுகின்றன.
மனம் - நல்ல மருந்து
மதுவிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள் குடி மறக்கச் செய்யும் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டாலே 95 சதவிகிதம் திருந்திவிடுவார்கள். கஞ்சா, பிரவுன்சுகர் போன்ற போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீள்வது சற்றே கடினம். குடி மட்டுமே என்றால் நிச்சயம் நல்ல நிவாரணம் பெற முடியும். அண்மைக்காலமாக இதில் சிக்குபவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்தான். ‘ஜஸ்ட் ஃபார் ஏ ஃபன்’ என்று வேடிக்கையாகத் தொடங்குவதுதான், இறுதியில் வாழ்க்கையையே வறட்சியாக்கி விடுகிறது. அதனால், எந்த வயதிலும், எந்த இடத்திலும் மனக் கட்டுப்பாடு என்பது மிக அவசியம்.
புரிதல் தேவை
பாதிக்கப்பட்டவர்கள் ‘மொடாக்குடி என்பது ஒரு நோய்’ என்பதைப் புரிந்து ஏற்றுக்கொண்டாலே, அதற்கு சிகிச்சை எடுக்கத் தயாராகி விடுவார்கள். இதைப் புரிய வைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால், விடாமுயற்சிக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். நம் ஊரில் அதீதமாகக் குடித்துவிட்டு, ஒட்டுமொத்த குடும்பத்தின் வாழ்க்கையையே சிதைப்பவர்களை ‘திமிர் பிடிச்சு திரியறான்’ என்கிறார்கள்.
அமெரிக்கா, ஐரோப்பா உள்பட வளர்ச்சியடைந்த பகுதிகளில் குடியினால் ஏற்படும் விடாமுடியா அடிக்ஷனை ‘நோய்’ என்றே கருதுகிறார்கள். அதனால் குடிகாரர் ஒருவித பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார் என சமூகமும் மருத்துவ உலகமும் என்கிற புரிதலோடு, அவரை மீட்கும் நடவடிக்கையில் இறங்குகிறார்கள்.
குடிக்கும் பழக்கமானது ஒரு நோய் என்பதால் அதற்கு தகுந்த உடல், மனம் இரண்டிற்கும் சிகிச்சையளிப்பதன் மூலம் குணமாக்கலாம்.
.