நீங்கள் அழகிய சிற்பமாக சாதனையாளராக உருவாக விரும்புகிறீர்களா? 

Reha
2 years ago
நீங்கள் அழகிய சிற்பமாக சாதனையாளராக உருவாக விரும்புகிறீர்களா? 

ஒரு சிறிய விதைக்குள் தான் மாபெரும் தேக்கு மரம் உறங்கிக் கொண்டு இருக்கிறது. ஒரு முட்டைக்குள் தான் பறவை வெளிவரக் காத்திருக்கிறது. ஒரு பாறைக்குள் தான் ஒரு அழகிய சிற்பம் ஒளிந்து கொண்டு இருக்கிறது. 

உங்கள் உயர்ந்த கனவுகளுக்குள் தான் உங்கள் இலட்சியம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது" என்கிறார் இங்கிலாந்து சிந்தனையாளர் ஜேம்ஸ் ஆலன்.

உங்களுக்குள் தான் ஒரு சாதனையாளர் ஒளிந்து கொண்டு இருக்கிறார். 

சாதிக்க ஆசைப்பட்டு, தன் திறமையையும், உழைப்பையும் பெருக்கிக் கொள்பவர்களுக்கு உள்ளே ஒளிந்திருக்கும் சாதனையாளர் மெல்ல மெல்ல வெளிப்படுகிறார். 

ஒரு பாறை வெறும் பாறையாக, குத்துக்கல்லாக ஒரு இடத்தில் இருக்கும் போது அது யார் கண்ணிலும் படுவதில்லை. போவோர் வருவோரின் கவனத்தையும் ஈர்ப்பதில்லை. அதுவே சிற்பி ஒருவரால் திறம்பட செதுக்கப்பட்டு, சுற்றிலுமுள்ள தேவையற்ற கற்துகள்கள் உளி கொண்டு நீக்கப்பட்டு, சிலையாக வடிவமைக்கப்பட்டு நிறுத்தப்படும் போது, அது அனைவராலும் கவரப்பட்டு ஒரு தனி அந்தஸ்தைப் பெற்று விடுகிறது.

நீங்கள் வெறும் பாறையாக - சாதாரண மனிதராகவே இருந்து விடுகிறீர்களா? அல்லது அழகிய சிற்பமாக சாதனையாளராக உருவாக விரும்புகிறீர்களா? 

இன்றிலிருந்தே ஆரம்பியுங்கள். அதாவது உங்கள் 'மனம்' என்னும் உளி கொண்டு உங்களிடமுள்ள கோபம், பேராசை, பொறாமை, சோம்பல் போன்ற தேவையற்ற கற்துகள்களை நீக்கிவிட்டு உங்களை நீங்களே செதுக்கினால் அழகிய சிற்பமாக, ஒரு சாதனையாளராக சாதிப்பீர்கள். இது உறுதி. ஆம்... உங்கள் சிலையை வடிவமைக்கும் சிற்பி நீங்கள் தான். சிலையும் நீயே! சிற்பியும் நீயே!

"மனிதன் நம்பிக்கை (சிரத்தை) மயமானவன். நம்பிக்கை அவனவனிடம் உள்ள இயல்புக்குத் தக்கபடி இருக்கும். எவனுக்கு எதில் நம்பிக்கை உண்டாகிறதோ அவன் அதுவாகவே ஆகிறான்" என்கிறது பகவத் கீதை. 

ஆம், ஆழ் மனதில் நம்பிக்கை வையுங்கள். நிச்சயம் வெல்வீர்கள். '