கோவா சொகுசு கப்பலில் 66 பேருக்கு கொரோனா: போராடும் பயணிகள் - காரணம் என்ன?
மும்பையில் இருந்து கோவாவுக்கு ‘கார்டெலியா குரூஸ்’ என்ற உல்லாச சுற்றுலா கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒமைக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில், புத்தாண்டை கொண்டாடும் வகையில் இக்கப்பலில் ஏராளமானோர் பயணிப்பதாக அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்கள் சுமார் 2000 பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு வெளியாகும் வரை யாரும் கப்பலில் இருந்து இறங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், கார்டெலியா கப்பலில் இருந்து 2,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 66 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கப்பலில் இருந்த பயணிகளை வெளியேற்றுவது பற்றிய முறையான நடவடிக்கைகளை எடுப்பது பற்றி அரசு ஆலோசனை மேற்கொள்ளும் என்றும் கோவா சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாதவர்களை கப்பலை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்படுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதனால் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களும் பாதிக்கப்படாதவர்களும் ஒன்றாக இருப்பதால் தொற்று எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் இருப்பதாக அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், ''கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களை கப்பலில் இருந்து வெளியே அழைத்துச்சென்று தனிமைப்படுத்தவோ, சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படவோ இல்லை. இதனால் அவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் யார் உதவுவார்கள்? கோவா அரசும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் மிகவும் கவனக்குறைவாகவும், பொறுப்பற்ற முறையிலும் செயல்படுகின்றனர் கப்பலில் இருப்பவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வேற்றுகிரகவாசிகளோ வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. தயவுசெய்து அவர்களுக்கு உதவுங்கள்" என்று அவர் கூறினார்.
மேலும் பல இந்திய செய்திகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.