மருத்துவ குணங்கள் நிறைந்த மகிழம்பூ!

#Health
மருத்துவ குணங்கள் நிறைந்த மகிழம்பூ!

மலர் என்றாலே மணம்தான்... அதிலும் ஒரு சில பூக்கள் அதீத மணம் கொண்டவையாக இருக்கும். அதில் குறிப்பிடத்தகுந்தது மகிழம்பூ. அழகும், நறுமணமும் கொண்ட இந்த மகிழம்பூ சூடுவதற்கானது மட்டுமல்ல; மருத்துவ குணங்களும் நிறைந்தது என்கிறார் சித்த மருத்துவர் நந்தினி சுப்ரமணியம். அதன் மருத்துவப் பயன்களைத் தொடர்ந்து விவரிக்கிறார்.

அடர்த்தியான கரும்பச்சை இலைகளைக் கொண்டது மகிழ மரம். இதன் தாவரவியல் பெயர் Mimusops elengi(Bakula). இதன் பூ சந்தன நிறத்தில் இருக்கும். காய்ந்த பிறகு ப்ரௌன் நிறத்துக்கு மாறிவிடும். மற்ற பூக்கள் காய்ந்த பிறகு மணம் குறைந்து, இழந்துவிடும். ஆனால், மகிழம்பூவோ காய, காய மேலும் அதன் நறுமணம் அதிகரிக்கும். இதனை மகிழம்பூவின் தனிச்சிறப்பு என்றே சொல்லலாம்.

அதனால்தான் தெய்வங்களுக்குக் கூட. காய்ந்திருந்தாலும் மகிழம்பூவினை மாலையாக அணிவிக்கிறார்கள். திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலின் தல விருட்சமே மகிழம் மரம்தான் என்பதும் பலருக்குத் தெரிந்திருக்கும். மகிழ மரத்தின் காய், பழம், இலை, பூ, பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் வாய்ந்தவை. இவை குறித்தான சித்த மருத்துவ குறிப்புகள் அதிகம் கிடைக்கிறது.

மகிழம் காய்

மகிழம் காயை பல்லில் வைத்து மெல்லும்போது அதிலிருந்து ஒரு பால் வரும். அப்படியே சாப்பிடலாம். அந்த காய் நல்ல துவர்ப்பாக இருக்கும். மகிழம் காயை சாப்பிட்டால் உடனடியாக பல் வலி குறையும். 15 நாட்கள் அல்லது ஒரு மாதம் தினமும் ஒரு மகிழம் காயை சாப்பிட்டு வந்தால் பல் வலி குறையும். ஈறுகள் இறுகி பல் ஆடுவது நிற்கும்.

மகிழம் பழம்

மகிழம் பழம் நல்ல வாசனையாக இருக்கும். சாப்பிட சுவையாக இருக்கும். மகிழம் பழம் சாப்பிட்டால் ஒற்றை தலைவலி எனப்படும் மைக்ரேன் தலைவலி குறையும். தசைகளின் இறுக்கம் கொஞ்சம் தளர்வதால் தலைவலி நீங்குவதோடு நல்ல தூக்கம் வரும். அத்துடன் மன அழுத்தம், மனச் சோர்வு போன்றவையும் நீங்கும். ஒன்று அல்லது இரண்டு பழங்கள் சாப்பிடலாம்.

மகிழம்பூ

மகிழம்பூவை கஷாயம் போல் காய்ச்சி குடிக்கலாம். 10 பூக்கள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அந்த நீர் அரை டம்ளராக சுண்டும் வரை கொதிக்க விட வேண்டும். அந்த கஷாயத்தைப் பருக ஒற்றைத் தலைவலி குறையும். பல் வலி உள்ளவர்கள் மகிழம்பூவுடன் கிராம்பு சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம்.

மகிழம்பூவை உலர்த்தி பொடி செய்து அதனை ஒரு சிட்டிகை அளவு எடுத்து மூக்குப்பொடி போல் உறிஞ்ச தலையில் கோர்த்துக் கொண்டிருக்கும் நீர் வெளியேறி தலைவலி குறையும். தலை பாரமும் குறையும். மகிழம்பூ கஷாயத்துடன் கல்கண்டு மற்றும் பால் சேர்த்து இரவு உறங்குவதற்கு முன் அருந்தி வர உடல் வலிமை பெறும். உடல் வெப்பம் குறையும்.

மகிழம் பட்டை

மகிழம்பட்டையை உலர்த்தி பொடி செய்து அதனை ஒரு சிட்டிகை அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அந்த நீர் அரை டம்ளர் அளவுக்கு குறையும் (வற்றும்) வரை கொதிக்க விட வேண்டும். அந்த கஷாயத்தைப் பருக கருப்பை பலப்படும். இந்த கஷாயம் பருக காய்ச்சலும் குறையும். மகிழம் மரத்தின் பாகங்கள் உடல் வெப்பத்தைக் குறைக்கும் தன்மை உடையவை.

அந்த பொடியை தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவி வர பாத வெடிப்புகள் குறையும். தோல் வறட்சிக்கும் இப்படி செய்து வர தோலில் உண்டாகும் வறட்சி நீங்கும். கருவேலம்பட்டை போல் மகிழம் பட்டைகளையும் பல் பொடியுடன் சேர்த்து உபயோகிக்கலாம். பற்களுக்கு நல்லது. மகிழம் பட்டைகளை கொதிக்க வைத்து வாய் கொப்புளித்து வர வாய்ப்புண் குறையும்.

மகிழம் இலைகள்

மகிழம் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய நீரை கொண்டு உடலை துடைக்க உடல் வெப்பம் குறைந்து காய்ச்சல் குறையும். மகிழம் இலைகளையும் பல் பொடியுடன் சேர்த்து உபயோகிக்கலாம். பற்களுக்கு நல்லது.

மகிழம் விதை

மகிழம் விதைகளை காய வைத்து பொடி செய்து சிறிதளவு (ஒரு கிராம்) எடுத்து தண்ணீரில் கொதிக்க விட்டு கல்கண்டு மற்றும் பால் சேர்த்து குடித்து வர உடல் வலிமை பெறும். உடல் அழகு பெறும். ஆண்மையும் பெருகும். மகிழம் விதைகளை பாலில் அரைத்தும் சாப்பிடலாம். தாது விருத்தி அதிகரிக்கும். அதிகம் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

மகிழம்பூவில் உள்ள வேதிப்பொருட்கள்

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து, பீட்டா அமைரின், ஆல்பா ஸ்பைனோ ஸ்பீரால், பீட்டா குளுக்கோசைடு, பால்மடிக், ஒலியிக் அமிலங்கள்.

மருந்தியல் செயல்பாடு இலைச்சாறு- நோய்களைத் தரும் நுண்ணுயிர்களை எதிர்க்கும் Antibacterial activity தன்மை கொண்டதாகவும், இதன் நறுமண எண்ணெய் பூஞ்சைகளுடன் போராடும் தன்மை உடையதாகவும், பூச்சாறு உடல் வெப்பம் தணிப்பதாகவும், மகிழம்பட்டை Anti inflammatory குணம் கொண்ட அழற்சி நீக்கியாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுகிறது.  மகிழம் மரத்தின் பாகங்களை பயன்படுத்தி நல்ல பலன் பெறுங்கள்!

மேலும் பல ஆரோக்கிய செய்திகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.