ஸ்டாலின் கூட்டும் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் ஜனநாயக விரோதமானது என சாடியுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி
ஸ்டாலின் கூட்டும் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் ஜனநாயக விரோதமானது என சாடியுள்ளார்.டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் கருத்து.
நீட் தேர்வு ரத்து குறித்து இன்று சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடத்தப்படுவதாக தெரிகிறது. நீட் தேர்வு என்பது மத்திய அரசின் விருப்பத்தின் பேரில் கொண்டு வரப்பட்ட தேர்வு அல்ல. மருத்துவ கல்வியை ஒழுங்குபடுத்தும் தேசிய மருத்துவ கவுன்சில் ஆலோசனையின் அடிப்படையிலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்ட விஷயம் அது. அகில இந்திய அளவில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டு விட்டால் அந்த சட்டத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாநில அரசும் அந்தந்த மாநில மாணவர்களை அத்தேர்வுகளுக்கு ஒப்ப ஆயத்தப் படுத்துவதே தலையாய கடமையாகும். அதை விட்டுவிட்டு அரசியல் காரணங்களுக்காக ’தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்’ என்பதைப்போல தொடர்ந்து அதில் அரசியல் செய்வது அழகல்ல.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு நீட் விலக்கு கேட்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவர் வரை சென்று அது ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு விட்டது. இந்திய அரசியல் சாசனத்தின் படி, இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்திற்கு எதிராக எந்த ஒரு மாநில அரசும் நிறைவேற்றுகின்ற தீர்மானமோ அல்லது சட்டமோ செல்லுபடி ஆகாது.
கடந்த 2017 முதல் 2019 மற்றும் 2021 வரையிலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு முழக்கங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்தார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்திலேயே சட்டம் இயற்றி அதை ரத்து செய்வோம் என்று வாக்குகளைப் பெற்று பெருவாரியான நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். வெற்றி பெற்று மூன்று வருடங்கள் நிறைவுறும் இந்த தருணத்திலும் நாடாளுமன்றத்தில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் ஒரு அணுவைக் கூட அசைக்க முடியவில்லை.
அதேபோல 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பழைய பல்லவியை மீண்டும் பாடி வெற்றி பெற்றால் ’முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ என்று அப்பாவும், மகறும் வீதிக்கு வீதி முழங்கினார்கள்; வாக்குறுதி தந்தார்கள். இப்பொழுது ஆட்சி பொறுப்பேற்று 7 மாதங்கள் நிறைவுற்று எட்டாவது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறார்கள். சட்டமன்ற தீர்மானத்தின் மூலம் நீட் ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை.
மாறாக, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்துவிட்டு, அவர்கள் அனுப்பிய தீர்மானத்தை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பிட உத்தரவிட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுடைய வீட்டை ஏழு நாட்களுக்கு மேலாகச் சுற்றி வந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்துறை அமைச்சர் அவர்கள் சந்திக்க மறுத்து விட்டார். எனவே தமிழக மக்களை அவமதித்து விட்டார்; புறக்கணித்து விட்டார்; ஏமாற்றி விட்டார் என்றெல்லாம் தமிழகத்திற்கு வந்து கூச்சலிடுகிறார்கள்.
ஏறக்குறைய ஒரு மாத காலத்திற்கு மேலாக நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றது. உண்மையிலேயே அவர்கள் உள்துறை அமைச்சரைச் சந்திக்க நினைத்திருந்தால் நாடாளுமன்ற நிகழ்வுகளின் போதே மிகவும் எளிதாகச் சென்று சந்தித்திருக்க முடியும். ஏறக்குறைய 10 ஆண்டுக் காலத்திற்கு மேலாக மத்திய அமைச்சரவையில் பங்கு பெற்ற தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடியவர்களை சந்திப்பதற்கு உள்துறை அமைச்சர் மறுத்திருக்க மாட்டார்கள்.
ஆனால், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரின் நோக்கம் உண்மையாக நடந்து கொள்வதோ மக்களின் பிரச்சனைகளை நியாயமாக எடுத்துச் செல்வதோ அல்ல.
நிச்சயமாக இது நடக்காது என்று தெரிந்த பின்பும் தாங்கள் பொய்யான வாக்குறுதி கொடுத்து நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் மக்களின் வாக்குகளைப் பெற்று விட்டோம். ஆனால், கொடுத்தபடி வாக்குறுதியைக் காப்பாற்ற முடியவில்லை. எப்படியாவது மீண்டும் பழியை மத்திய பாஜக அரசின் மீது போட்டுத் தப்பித்துக் கொள்வதற்காக நடத்துகின்ற நாடகமே இவை அனைத்தும். நீட் விசயத்தில் தமிழக மக்களை ஏமாற்றுவது அமித் ஷா அவர்கள் அல்ல, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே!
மாநில ஆளுநர்களை நியமிப்பதற்கான பரிந்துரைகளை உள்துறை அமைச்சகம் செய்யலாம். இறுதியில் ஜனாதிபதி அவர்களே ஆளுநர்களை நியமிக்கிறார்கள். நியமிக்கின்ற வரையிலும் தான் அவர்களின் பணியே தவிர. அதன்பின் அனைத்து ஆளுநர்களும் சட்ட விதிமுறைகளின் படி சுதந்திரமாகச் செயல்பட முழு உரிமை பெற்றவர்கள். அசாதாரணமான சூழல்களில் ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றாகச் சீர்குலைந்து அமைதிக்குப் பங்கம் ஏற்படும் பட்சத்தில் மட்டுமே உள்துறையின் மூலமாக அறிக்கைகள் கேட்டுப் பெற முடியுமே தவிர, சாதாரணமான எந்த காலத்திலும் ஆளுநர்களுக்கு உள்துறை நிர்ப்பந்தம் கொடுப்பது பழக்கமும் அல்ல; அது வழக்கமும் ஆகாது.
மேலும் எந்த உள்துறையும் அமைச்சகமும் ஆளுநர்களுடைய அன்றாட நடவடிக்கையில் தலையிட்டு ’இந்த மனுவை அங்கே அனுப்புங்கள், அந்த மனுவை இங்கே அனுப்புங்கள்’ என்று சொல்வது எந்த ஆட்சியிலும் இல்லாத நடைமுறைகள். டி.ஆர்.பாலு வாஜ்பாய் அவர்கள் காலத்திலிருந்து மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து இருந்து வரக்கூடியவர். இவர் சட்ட நடைமுறைகளை முறையாக ஸ்டாலினுக்கு எடுத்துச் சொல்லி இருக்க வேண்டும். இந்தியாவில் மக்களவையில் 545 நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் என ஆக மொத்தம் ஏறக்குறைய 800 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பல கட்சிகளைச் சார்ந்தவர்களாகவும், பல மாநிலங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். எல்லோரும் தினமும் பாரதப் பிரதமர் அவர்களையோ, ஜனாதிபதி அவர்களையோ, உள்துறை அமைச்சர் அவர்களையோ சந்திப்பது என்பது இயலாத காரியம்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர்.
உள்துறை அமைச்சர் போன்றோரைச் சந்திக்க வருகின்ற பொழுது அந்த குழு எதற்காக வருகிறது? என்று தெரிந்த பின்பு தான் வழக்கமாக சந்திக்க அனுமதி வழங்கப்படும்.
ஒரு மாத காலத்திற்கு மேலாக நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கடைசி இரண்டு நாட்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நீட் தேர்வு குறித்து கூச்சல், குழப்பங்களை ஏற்படுத்தி வெளிநடப்பு செய்ததை உள்துறை அமைச்சகம் அறியாமலா இருக்கும்? மீண்டும் அதே பிரச்சனைக்காக உள்துறை அமைச்சரைச் சந்திக்க வருகின்ற பொழுது, புதிதாக என்ன சொல்ல இருக்கின்றது என்ற காரணத்திற்காகக் கூட டி.ஆர்.பாலு தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரம் ஒதுக்காமலிருந்திருக்கலாம். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்க்கவில்லை என்பதற்காக அமித்ஷா அவர்கள் 8 கோடி தமிழ் மக்களையும் அவமதித்து விட்டார் என டி.ஆர்.பாலு பேசுவதும், அதையே ஸ்டாலின் அவர்கள் பேசுவதும் அபத்தத்திலும் அபத்தமான காரியமாகும்.
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நீட் ஒன்றைப் பிடித்துக் கொண்டே தொடர்ந்து அடுத்த மூன்று ஆண்டு காலத்திற்கும் அரசியல் செய்ய நினைக்கிறார்கள். செத்த பாம்பை அடிப்பது என்பது வேறு; அது மண்ணோடு மண்ணாக மக்கிப் போன பிறகும் அதையே அடித்துக் கொண்டிருக்கிறார்களே அதுதான் வேடிக்கை.
நீட்டுக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் அரங்கேறிய நாடகம் தமிழக மக்கள் மத்தியில் எடுபடவில்லை. தொடர்ந்து டி.ஆர்.பாலு மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமித்ஷா அவர்கள் வீட்டின் முன்பு நடத்திய நாடகமும் எடுபடவில்லை. இன்று ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் என்ற பெயரில் நாடகம் ஒன்று நடைபெறுவதாகத் தெரிகிறது.
அது என்ன சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம்? ஒரு கட்சிக்குச் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இல்லை என்று சொன்னால் அவர்கள் அரசியல் கட்சி இல்லை என்று சொல்லிவிட முடியுமா? 2011 முதல் 2016 வரை தமிழகச் சட்டமன்றத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடத் தான் சட்டமன்றத்தில் இடம்பெறவில்லை; பாமக இல்லை; அதுபோல பல கட்சிகள் இடம் பெறவில்லை. அதற்காக அவர்கள் எல்லாம் அரசியல் கட்சிகள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? ஏன் திமுக கூடத் தான் 1949 இல் துவங்கி 1957 வரையிலும் அக்கட்சி சட்டமன்றத்திற்கு வரவில்லை. 1991 இல் ஒரே ஒரு ஒருவர் மட்டும் வெற்றி பெற்றார். அவரும் சட்டமன்றத்திற்கு வரவில்லை ராஜினாமா செய்துவிட்டார். அதன் பின்பு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் செல்வராஜ் மற்றும் இளம்பரிதி வெற்றி பெற்று சட்டமன்றம் செல்லுகின்ற வரை திமுக சட்டமன்றத்தில் இடம் பெறாத காலம் உண்டு. அதற்காக திமுக அரசியல் கட்சி இல்லை என்று சொல்லி விட முடியுமா? புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தமிழக சட்டமன்றத்தில் 1996-2001 வரை ஒரு சட்டமன்ற உறுப்பினரும்; 2011-2016 வரை இரண்டு உறுப்பினர்களும் இருந்தோம். இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை என்பதற்காக அரசியல் கட்சி இல்லை என்று சொல்லி விட முடியாது.
ஜனநாயக நாட்டில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றால் மட்டுமே அரசியல் கட்சிகளாக அங்கீகரித்தால் அதைவிட வேறு ஜனநாயகப் படுகொலை வேறு எதுவும் இருக்க முடியாது. கடந்த மூன்று தினங்களாக சட்டமன்றத்திலே சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. சட்டமன்றக் கூட்டம் நடக்கின்ற போது அந்தந்த சட்டமன்ற கட்சித் தலைவர்களை அழைத்து அவர்களுடைய கருத்துக்களை கேட்டிருக்கலாம். இப்போது சட்டமன்றம் நடைபெறாத நேரத்தில், நீட் தேர்வு குறித்து ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகின்றது. தமிழகத்தில் உள்ள பதிவு பெற்ற அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்களை அழைத்துப் பேசுவதற்குப் பதிலாக ஐந்தாறு கட்சித் தலைவர்களை அழைத்து அது என்ன குசுகுசு கூட்டம். இந்த ஐந்தாறு கட்சிகள் மட்டும் எப்படி ஒட்டுமொத்த தமிழக மக்களின் குரலாக இருக்க முடியும்?
அடிப்படையிலேயே இன்று ஸ்டாலின் அவர்களால் கூட்டப்பட்டு இருக்கக்கூடிய இந்த சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் என்பது அடிப்படை ஜனநாயகமற்றது; அது உள்நோக்கம் கொண்டது; கேள்விக்குரியது; நிராகரிக்கப்பட வேண்டியது. இந்த ஐந்தாறு தலைவர்கள் மட்டும் கூடி எடுக்கக்கூடிய எந்த முடிவுகளும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் வெளிப்பாடு என்று ஏற்றுக்கொள்ள இயலாது. ”சிலரை சில காலம் ஏமாற்றலாம்; பலரை சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது” என்பதற்கு இணங்க திமுகவினுடைய பன்முக தோல்விகளை மறைப்பதற்காக நீட் என்ற அஸ்திரத்தை எடுத்து தன்னுடைய தோல்விகளை மறைக்க நாடகம் ஆடுவார்களேயானால் அவர்கள் மீண்டும் மீண்டும் அம்பலப்பட்டு அதுவே அவர்களுக்கு எதிராகவே முடியும்.
நீட் தேர்வு அறிமுகமான பிறகு, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற அடிப்படையில் தமிழகத்திற்கும் 20 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளும் கிடைத்துள்ளன. வெறும் 3000 பேர் மட்டுமே மருத்துவ மாணவர்களாக இருந்த காலம் மாறி இப்பொழுது ஏறக்குறைய 10,000 மாணவர்கள் ஆண்டுதோறும் மருத்துவர்களாகக் கூடிய அரிய வாய்ப்புகளும் உருவாகி உள்ளது. ஆனால் நீட் தேர்வின் சாதக அம்சங்களை எல்லாம் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் முற்றாக மறைத்துவிட்டு கட்டுக் கதைகளைக் கூறி பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
உண்மையிலேயே தமிழக மக்கள் அனைவருடைய உணர்வுகளையும் அரசு தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் அனைவரின் உணர்வுகளையும் பிரதிபலிக்கக் கூடிய தமிழகத்தின் பதிவு பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள், பொதுவாழ்வில் ஈடுபட்ட இருக்கக்கூடிய அனைத்து சங்கங்களையும் அழைத்துப் பேசி, அவர்களின் கருத்துக்களையும் அறிய வேண்டும். அதை விட்டுவிட்டு தங்களுக்கு வேண்டிய ஒத்து ஊதக்கூடிய ஒருசில அரசியல் கட்சிகளை மட்டும் அழைத்து பேசுவது தமிழக மக்களை ஏமாற்றுவதற்கு உண்டான திமுகவின் செயல் திட்டமாகவே கருதப்படும்.
முதல்வர் அவர்களே! தங்களுடைய அரசியல் லாபத்திற்காக நீட் தேர்வை ஆயுதமாக்காதீர்கள்; தமிழக மாணவர்களை பகடைக்காய் ஆக்காதீர்கள்.