இந்தியாவில் சாமி சிலையின் காலடியிலிருந்து மீட்கப்பட்ட மனித தலை!
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் சாலையோர வழிப்பாட்டுத் தலத்திலிருந்த சாமி சிலையின் காலடியிலிருந்து துண்டிக்கப்பட்ட மனித தலை மீட்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் சாலையோர வழிப்பாட்டு தலத்தில் உள்ள காளி சிலையின் காலடியில் கடந்த 11 ஆம் திகதியன்று குறித்த துண்டிக்கப்பட்ட தலை மீட்கப்பட்டதாக அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது நரபலியாக இருக்குமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபருக்கு சுமார் 30 வயதாக இருக்கலாம் எனவும், அந்த நபர் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு, அவரது தலை சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தலை துண்டிக்கப்பட்ட குறித்த நபரின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அத்துடன், அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிரீவி கெமராக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.