முதுமை முடிவு அல்ல... வழிகாட்டும் இயன்முறை மருத்துவம்!
சிகிச்சைக்கு வரும் வயதானவர்களில் பலரும் சொல்வது, ‘‘வயசாகிட்டதுனால கீழ ஒக்காரக் கூடாதுனு சொல்லிட்டாங்க. கீழ ஒக்காந்து பத்து, பண்ணண்டு வருசத்துக்கு மேல ஆகுது”, ‘‘எந்த வேளையும் செய்ய வேண்டாம், எங்கயும் வெளியப் போக வேண்டான்னு பசங்க சொல்லிட்டாங்க. அதான் வீட்லயே இருக்கேன்” என்பதுதான்.
அதிலும் இந்த கொரோனா பெரும் தொற்று காலத்தில் வெளியே செல்வதை பெரியவர்கள் கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளத்தான் வேண்டும். எனினும், இதற்கு முன்பும் கூட பல பிள்ளைகள் தங்கள் பெற்றோர் உழைத்தது போதும் என நினைத்து, ‘‘இனிமே நீங்க ரெஸ்ட் மட்டும் எடுங்க. எந்த வேலையும் செய்ய வேண்டாம்” என்று கூறுவதை வாடிக்கையாக வைத்திருப்பர்.
இதில் தவறில்லை என்றாலும், சில பிள்ளைகளின் பார்வையில் ஓய்வெடுப்பது என்பது ‘முழுக்க முழுக்க ஒன்றும் செய்யாமல் இருப்பது’ என்பது என நினைத்துக் கொள்கின்றனர். சில பெரியோர்களும் அதேபோல ‘இந்த வயதில் ஒன்றும் செய்யாமல் இருப்பதுதான் ஆரோக்கியம்’ என நினைத்து, நான்கு சுவருக்குள் அடைந்து, சின்னச் சின்ன வேலைகளைக் கூட செய்ய யோசிக்கின்றனர்.
எனவே எதுவும் செய்யாமல் ‘வெறுமனே உட்கார்ந்து இருத்தல்’ உடல் நலனை பாதுகாக்காது, பாதிக்கவே செய்யும் என்பதனை வலியுறுத்தியும், பெரியவர்கள் நலனில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு என்ன என்பதனையும் உணர்த்தவே இக்கட்டுரை. வயதாவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்...
- சிறு வேலைகள் செய்தாலும் உடலில் வலி உண்டாவது, மூச்சு வாங்குவது என சிறு சிரமங்கள் தோன்றும்.
- ஏற்கனவே நெடு நாட்களாக இருந்துவரும் மூட்டு வலி (கழுத்து, இடுப்பு, கால் முட்டி) அவ்வப்போது வந்து போகும்.
- அவ்வப்போது ஞாபக மறதி ஏற்படுவது.
- ஒழுங்கற்ற அல்லது தாமதமான செரிமானம்.
- இரவில் முழுநேர தூக்கம் இல்லாமல் இருப்பது (ஆறு முதல் ஏழு மணிநேர தூக்கம் பெரியவர்களுக்கு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது).
- நடப்பதில் திடத்தன்மை (balance) இல்லாமல் போவது.
- குறிப்பு: இவை பொதுவான மாற்றங்களே. இவையன்றி மேலும் பல மாற்றங்கள் வயதாவதால் வரக்கூடும் என்பது கவனிக்கத்தக்கது.
என்ன செய்ய வேண்டும்..?
- தினமும் குறைந்தது முப்பது நிமிடமாவது உடற்பயிற்சி செய்தல் அவசியம். உடற்பயிற்சி என்றதும் பெரிய பெரிய டம்பெல்கள் வைத்து பயிற்சிகள் செய்வது, நேரம் கணக்கு இல்லாமல் டிரட்மில்லில் ஓடுவது என்பது அல்ல. பெரியவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கென்று தனி வகையான பயிற்சிகள் உள்ளன. அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகினால், அவர் தகுந்த பயிற்சிகளைப் பரிந்துரை செய்து, அவற்றை எப்படி செய்யவேண்டும் என சொல்லியும் கொடுப்பார்கள்.
- உடற்பயிற்சி செய்வதன் மூலம் சீரான தூக்கமும், ஒழுங்கான செரிமானமும், மனதில் உற்சாகமும் இருக்கும்.
- உடற்பயிற்சி செய்ய விருப்பம் இல்லாதவர்கள் முப்பது நிமிடம் நடைப்பயிற்சி மட்டும் செய்யலாம்.
- நடந்தால் கால் மூட்டு வலிக்கின்றது’ என்பவர்கள் நேரம் கடத்தாது அருகில் உள்ள இயன்முறை மருத்துவரின் ஆலோசனைகளை கேட்பது நல்லது. சிறு சிறு வேலைகளை தவிர்க்காமல் செய்வது.
- வீட்டில் மற்ற உறுப்பினர்களுக்கு உதவியாக இருப்பது.
- எளிமையான மூச்சுப் பயிற்சியை இயன்முறை மருத்துவரிடம் கற்றுத் தெரிந்து கட்டாயம் காலை அல்லது மாலை வேளையில் செய்தல் அவசியம். அப்போதுதான் நுரையீரலில் சளி சேராமல், சிரமம் இல்லாமல் மூச்சு விட முடியும்.
- நுணுக்கமான முறையில் செய்யப்படும் செயல்கள் அதாவது, துணிகள் தைப்பது, பூண்டு உரிப்பது, பூ கட்டுவது, காய்கள் நறுக்குவது போன்ற வேலைகள் செய்தல் அவசியம். இதனால் மூளை செல்கள் புத்துணர்வு பெறும். மேலும் மூளை செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.
- மூட்டு வலி உள்ளவர்கள் தரையில் உட்காரவே கூடாது என்பது தவறு. ஒரு நாளைக்கு ஒருமணி நேரமாவது தரையில் சம்மனம் போட்டு அமர்வது அவசியம். மூட்டுவலி வரும் என்று தரையில் உட்காராமல் இருந்தால் மூட்டை சுற்றியுள்ள தசைகள் இறுக்கமாக மாறும். இதனால் மேலும் மூட்டுவலி அதிகரிக்குமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.
- *இவை தவிர, புதிய கலைகள் உட்பட ஏதாவது ஒன்றை தினமும் கற்றுக் கொள்வது, அந்தந்த நாளுக்கான வேலைகளை வழக்கப்படுத்தி (routine) செய்வது, புத்தகம் வாசிப்பது, சதுரங்கம் விளையாடுவது போன்று செய்து வந்தால் ஞாபக மறதி சிக்கல்கள் வருவதை தள்ளிப்போடலாம்.
என்ன செய்யக் கூடாது..?
- வேலை செய்தால் வலி ஏற்படும் என நினைத்து மூட்டுக்கு அசைவு கொடுக்காமல் இருந்தால் மூட்டுகள் மேலும் பலவீனமாக மாறும்.
- அதேபோல ஏதேனும் வலி வந்தால் தாமதம் செய்யாமல் இயன்முறை மருத்துவரை அணுகுதல் அவசியம். ஆரம்பத்திலேயே சிகிச்சை செய்ய தவறினால் (வயதாகும் காரணத்தால்) குணப்படுத்துவது கடினம்.
- கீழே உட்காருவது, குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது எல்லாம் அதிக நேரம், அதிக அளவில் செய்தால் தான் வலி வருமே தவிர, தினம் ஒரு மணிநேரம் கீழே உட்காருவது போன்று செய்வதால் பாதிப்புகள் வராது.எனவே பாதுகாப்பாக இருப்பதாய் நினைத்து ‘எதுவும் செய்யாமல் சும்மா இருந்து’ நம் உடலை நாமே கெடுத்துக்கொள்ளாமல், போதுமான ஓய்வும், சரியான உடற்பயிற்சிகளும், சிறந்த வாழ்க்கை முறையும் இருந்தால் போதும். முதுமைக் காலம் எளிதில் இனி இனிமைக் காலம் ஆகிவிடும்.
மேலும் ஆரோக்கிய தகவல்களை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.