ஆயுள் வளர்க்கும் ஆவாரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இயற்கையின் அதிசயம்
சாதாரணமாக எல்லா இடங்களிலும் வளர்ந்து காட்சி தரும் ஆவாரை, அசாதாரணமான மருத்துவப்பலன்களை கொண்டது. இதன் பெருமை பற்றிப் பேசும்போதெல்லாம் ‘ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ’ எனும் பழமொழியை எல்லோரும் நினைவு கூர்வதுண்டு. இதிலிருக்கும் தாவர வேதிப்பொருட்கள், பல்வேறு நலம் பயக்கும் செயல்களை விவரிக்கிறார் சித்த மருத்துவர் விக்ரம்குமார்.
‘‘Senna auriculata என்று தாவரவியலில் குறிப்பிடப்படும் ஆவாரையின் ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு மருத்துவ குணங்களை வெளிப்படுத்தும் வல்லமை படைத்தவை. வெப்ப காலங்களின் தாக்கத்தைத் தடுக்க இதன் இலைகளை தலையில் வைத்துக்கொள்ளும் வழக்கம் கிராமங்களில் இன்றளவும் தொடர்கிறது. மேகாரி, ஏமபுட்பி, ஆவரை, ஆகுலி, தலபோடம் போன்ற பல பெயர்கள் ஆவாரைக்கு உள்ளன. Cassia auriculata என்பது இதன் தாவரவியல் பெயர். Flavonoid, Tannins, Avarol போன்ற தாவர வேதிப்பொருட்களை ஆவாரை கொண்டுள்ளது.
நீரிழிவு நோயாளர்களின் உணவு/மருந்துப் பட்டியலில் கட்டாயம் இடம்பெற வேண்டிய மூலிகை ஆவாரம் பூ. இதன் மேன்மை குறித்து நவீன ஆய்வுகளும் வலியுறுத்துகின்றன. தற்காலத்தில் அதிகரித்திருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் திறன் படைத்தது ஆவாரம் பூக்கள் என்கிறது பல்வேறு மருத்துவ ஆய்வுகள். நீரிழிவு நோயின் குறிகுணங்களான அதிதாகம் (Polydipsia), அதிகமாக சிறுநீர் கழிதல் (Polyuria), நாவறட்சி, உடல் சோர்வு முதலியன கட்டுக்குள் வருவதற்கு ஆவாரம் பூ சிறந்த தேர்வு!
அழகிய மஞ்சள் நிற ஆவாரைப்பூக்கள், மருத்துவ குணத்திலும் அழகானவை. வியர்வை நாற்றத்தை தவிர்க்க, வேதியியல் கலவை நிறைந்த வாசனைப் பூச்சுக்களுக்கு பதிலாக ஆவாரை பூக்களை உணவுகளில் சேர்த்து வரலாம். பசுமையான ஆவாரம் பூக்களை குழம்பு அல்லது ரச வகைகளில் சேர்த்து அதன் பலன்களைப் பெறலாம்.
ஆவாரம் பூக்களுடன் பருப்பு சேர்த்து சுவை மற்றும் மருத்துவ குணமிக்க ரெசிபியை உருவாக்கலாம். கஃபைன் கலக்கப்பட்ட பானம் கொடுக்கும் உற்சாகத்தை, கஃபைனின் தாக்கம் இல்லாமலே ஆவாரம் பூ பானம் வழங்கும். ஆவாரம் பூக்களை உலரவைத்து, ‘கிரீன் - டீ’ தயாரிப்பதைப் போல மருத்துவ குணமிக்க பானத்தை உருவாக்கலாம்.
இதன் பட்டையைப் பொடித்து பாலோடு கலந்து கொடுக்க, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குறையும். வெள்ளைப்படுதல் மற்றும் சிறுநீர்ப்பாதை தொற்றுக்களை குணமாக்க 5 கிராம் ஆவாரைப் பிசினை மோரோடு கலந்து பருகலாம்.
ஆவாரம் பூ, கொன்றை, கடலழிஞ்சில், கோரைக்கிழங்கு, கோஷ்டம், மருதம்பட்டை, நாவல்… இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆவாரைக் குடிநீர், நீரிழிவு நோயின் குறிகுணங்களை குறைப்பதற்கான சித்த மருந்து. இக்குடிநீரைப் பருக, ‘காவிரி நீரும் வற்றிக் கடல்நீரும் வற்றுந் தானே’ என நீரிழிவு நோய் பற்றிய சூட்சுமத்தை அவிழ்க்கிறது சித்த மருத்துவப் பாடல் ஒன்று. ஆவாரங் குடிநீர், உடல் நாற்றத்தை போக்குவதோடு, பல நோய்களையும் தடுத்து இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கும்.
மூலிகை குளியல் பொடிகளில் ஆவாரம் பூ பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது. ஆவாரம் பூக்களை காய வைத்து பொடித்து, வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், சந்தன சிராய்கள் கலந்த குளியல் கலவைகளில் சேர்த்துக் கொள்ளலாம். ‘தேகத்திற்குப் பொற்சாயலை கொடுக்கும் ஆவாரம்பூ’ என்று இதன் பயன் பற்றி சிலாகித்திருக்கின்றனர் சித்தர்கள்.
ஆவாரை சமூலத்தின் சூரணம் இரண்டு பங்கும், கோரைக்கிழங்கு, கிச்சிலிக்கிழங்கு சூரணம் தலா ஒரு பங்கும் கூட்டி உடலில் தேய்த்து குளித்துவர வியர்வை நாற்றம் மறையும். அரப்பு இலைகளோடு ஆவாரம் பூக்களைச் சேர்த்து தயாரிக்கப்படும் கிராமத்து குளியல் பொடி, தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு உகந்தது.
இதன் வேர்ப்பட்டையை குடிநீரிட்டு, பால் சேர்த்து தயாரிக்கப்படும் எண்ணெயை தலைக்குத் தேய்த்து குளிக்க வெப்ப நோய்கள் வராமல் தடுக்கலாம். வேனிற் காலங்களில் குளிக்கும் தண்ணீரில் ஆவாரை இலைகளைப் போட்டு குளிக்க, உடல் குளிர்ச்சியடையும். ஆவாரை இலைகளை உலரவைத்து, முட்டை வெண்கருவோடு சேர்த்து மூட்டு வீக்கங்களில் பற்றுப் போடலாம்.’’