இன்று மகாத்மா காந்தி நினைவு நாள் 30-01-2022
மகாத்மா காந்தி, இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இவருடைய பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று தற்போதுவரை கொண்டாடப்பட்டு வருகிறது. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 2-ஆம் தேதி அக்டோபர் 1869-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார்.
இவரது தாய் மொழி குஜராத்தி. மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி. இவருடைய தாயார் பெயர் புத்லிபாய் ஆகும். காந்தி தனது 13ஆம் வயதில் கஸ்தூரிபாயை அவருடைய 13-வது வயதில் மணந்தார். இவருக்கு நான்கு குழந்தைகள். ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார். இளமை வயதில் காந்தியடிகள் பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார். தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடித்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்கறிஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார்.
தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாய் நாடு திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார். இது நிலையாக அமையாததால் தன் அண்ணன் இருக்கும் ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இந்த சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் அப்துல்லாஹ் அன்கோ எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தென் ஆப்பிரிக்கா பயணித்தார்.
அந்த சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த குடும்பஸ்தராக இருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. காந்திஜி இந்திய விடுதலைக்கும், சமூக நீதியை வலியுறுத்தியும், சமய நல்லிணக்கதிற்கும், தீண்டாமைக்கு எதிராகவும், முழு மதுவிலக்கு கோரியும் 17 முறை, 139 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டங்கள் மேற்கொண்டுள்ளார்.
அவற்றில் மூன்று முறை 21 நாட்கள் கொண்ட தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களை நடத்தினார். இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார். காந்திக்கு மகாத்மா என்னும் கௌரவத்தை வழங்கியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார். மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா மாளிகை காந்தி சமிதி தோட்டத்தில் நாதுராம் கோட்ஸே ஆல் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.