ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உருக்கமான உரை அந்த பதிவு இதோ
எனது மனதின் மகிழ்ச்சியான இந்த தருணத்தில் பங்கு பெற்ற உங்கள் அனைவருக்கும் நன்றி.!
இந்தநாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது. காரணம் ...
எங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டோம்.
இனி, இளைப்பாற விரும்புகிறோம்.
அதை அனுபவிக்க தயாராகிவிட்டோம்.
ஆனால், அதற்கு நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நான் எதிர்பார்ப்பதை விட நீங்கள்
அவளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.
அவள் என் வீட்டில் துள்ளித் திரிந்ததை விட உங்கள் வீட்டில் மகிழ்ச்சி துள்ளளோடு இருப்பாள் என நம்புகிறேன்.
இருந்தாலும், எல்லா சராசரி தந்தையைப் போலவும் நான் இதை திரும்பத் திரும்ப சொல்கிறேன் "தயவு செய்து அவள் மகிழ்ச்சிக்கு குறை ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்"
அவள் எப்போதுமே எனக்கு பாரமாக இருந்ததில்லை. இனியும் ஒருபோதும் பாரமாக கருத மாட்டேன்.
ஏனெனில், என் சுவாசம் இயல்பாக இருப்பதற்கும், என் இதழ்களில் புன்னகை பூப்பதற்கும் காரணம் அவளே.
இருந்தும் அவளை நான் திருமணம் செய்து கொடுக்கிறேன்.
ஏனென்றால் அது ஓர் இயற்கை நியதியாக இருக்கிறது.
கலாச்சாரத்துக்கு கட்டுப்பட்டு மட்டுமே அவளை உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்.
என் வீட்டின் மகிழ்ச்சிப் பேழை உங்கள் வீட்டில் ஒளி வீச வருகிறது.
எனது உலகத்தை உங்களுக்கு தாரை வார்த்துத் தருகிறேன்.
அந்த உலகம் என்றென்றைக்கும் அழகாக இருப்பதை நீங்களே உறுதி செய்ய வேண்டும்.
எனது இளவரசியை உங்களிடம் அனுப்புகிறேன்.
அவள் உங்கள் வீட்டின் ராணியாக திகழ வழிவகை செய்யுங்கள்.
எனது ரத்தமும், வியர்வையும் அவளை ஆளாக்கியிருக்கிறது.
இப்போது அவள் மாசறு பொன்னாக இருக்கிறாள்.
அவள் உங்கள் வீட்டுக்கு கொண்டு வரும் அன்பு, அக்கறை, அரவணைப்பு, அழகு, இதம் என எல்லாப் பண்புகளுக்கும் பரிசாக அவளுக்கு மகிழ்ச்சியைத் தாருங்கள்.
ஆம்,
அவளை தயவுசெய்து மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
எப்போதாவது அவள் சிறு தவறு செய்துவிட்டாள் என நினைத்தால் அவளை தாராளமாக திட்டுங்கள்
ஆனால் அதே வேளையில், அவள் மேல் செலுத்தும் அன்பில் குறை வைக்காதீர்கள்.
அவள் மிகவும் நளினமானவள்.
அவள் எப்போதாவது துவண்டு போய் இருந்தால் அவளுடன் இருங்கள்.
உங்களது சிறு கவனம் அவளுக்கு போதும்,
ஆறுதல் தர. அவள் உடல்நலன் பாதிக்கப்பட்டால் அவள் மீது அக்கறை காட்டுங்கள்.
அதுவே அவளுக்கு அருமருந்து.
அவளது பொறுப்புகளில் எப்போதாவது விலகிவிட்டால் அதைச் சுட்டிக்காட்டுங்கள்.
அவளைப் புரிந்து கொள்ளுங்கள்.
தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
என் மகளின் மகிழ்ச்சி மட்டுமே என் வாழ்நாள் லட்சியம்.
எனவே, தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அன்பிற்குரிய மருமகனே…
இந்த வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு புரியாமல் போகலாம்.
ஆனால், நாளை நீங்கள் ஒரு மகளைப் பெற்றெடுக்கும் பாக்கியவான் ஆகும் போது எனது வார்த்தைகளின் அர்த்தம் புரியும்.
அப்பொழுது உங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் 'என் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' என்று சொல்லும்.
எனவே, தயவு செய்து எனது மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த உரையை
மகளைப் பெற்ற ஒவ்வொரு தந்தைக்கும் அர்ப்பணிக்கிறேன் ....!