கவனம் இங்கே அதிகம் தேவை. காதல் விதிகள். பாகம் - 7

#Article #Love #Tamil People
கவனம் இங்கே அதிகம் தேவை. காதல் விதிகள். பாகம் - 7

பேசிப்பழக, சந்திக்கத் தொடங்கிய பின்னர் காதலில் சிக்கல் வராதா? சண்டை வராதா? பிரச்சனைகள் தோன்றாதா? வரும்.  கண்டிப்பாக வரும்.  எத்தனை அன்புடன் இருவரும் இருந்தாலும் சின்னச்சின்ன ஊடல்கள் வரத்தான் செய்யும்.  ஆனால் அவையெல்லாம் இரண்டே நாளில் மாறிவிடும்.  மாறிவிடுவதுதான் உண்மையான காதல்.

சங்கரும், ஜெயந்தியும் கடந்த ஆறு மாத காலமாக ஈருயிர், ஓருடல் என்பதுபோல பழகினர்.  அப்படித்தானே ஒருநாள் அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, ‘என் ஃப்ரண்ட்  வீட்ல ஒரு விசேஷம்.  உன்னய கூப்பிட்டு வர்றதா பிராமிஸ் பண்ணிட்டேனே என்றான் சங்கர்.

‘ஏய், என்ன விளையாடுறியா.  நான் இப்ப யார் வீட்டுக்கும் வர முடியாது?’ என்றாள்.

‘நான் பிராமிஸ் கொடுதுதேன் என்றான் சங்கர் மீண்டும்.

‘என்கிட்டே முதல்லியே கேட்க வேண்டியதானே.  நான் வேணும்னா உன் ஃப்ரண்ட்கிட்ட சாரி சொல்லிறேன் என்றாள்.

ஒரு எழவும் வேண்டாம்.  நான் சொன்னா நீ கேட்பேன்னு நினைச்சி சொன்னேம்பெரு.  என் புத்தியை செருப்பால அடிக்கணும்’ என்றபடி கோபத்தில் கிளம்பிவிட்டான் சங்கர்.

அவனாகவே ஒரு முடிவெடுத்து வந்து, அவனாகவே கோபப்பட்டுப் போனதில் ரொம்பவுமே மனம் வெறுத்துப்போனாள் ஜெயந்தி.  அவளும் கோபத்தில் போய்விட்டாள்.

தினமும் அலுவலகத்துக்கு போன் செய்து குட் மார்னிங் சொல்லும் சங்கர், அடுத்த இரண்டு நாள்கள் போன் செய்யவில்லை.  அதேபோல் இரவில் குட் நைட் சொல்லும் ஜெயந்தியும் பேசவில்லை.

இரண்டு நாள்கள் இருந்த கோபம் அடுத்தடுத்த நாள்களில் வடியத் தொடங்கியது.  இன்னும் காதலை அவள் வீட்டில் சொல்லாத நேரத்தில், பொதுவான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது ஏதாவது பிரச்சனை உண்டாக்கும் என்பது நிஜம்தான் என உணர்ந்தான் சங்கர்.

என் மீது எத்தனை நம்பிக்கை இருந்தால், அழைத்து வருகிறேன் என்று என்னிடம் கேட்காமலே சொல்லியிருப்பார்.  நான் போகவில்லை என்றால், அவரை யாராவது தப்பாகப் பேசலாமே என்று வருத்தப் பட்டாள் ஜெயந்தி.

இப்போது சங்கர் மீது கோபம் போய்விட்டது என்றாலும், எப்படி நாமே முதலில் பேசுவது, அவர் பேசட்டும் என ஒருநாள் காத்திருந்தாள்.  ஆனாலும் மனசு கேட்கவில்லை.  வழக்கமாக இருவரும் சேர்ந்து மாலை நேரங்களில் காபி சாப்பிடும் ஹோட்டலுக்குப் போய் வழக்கமாக உட்காரும் அறைக்குள் போனவள் ஒரு கணம் அதிர்ந்து போய்விட்டாள்.

அங்கே அவளுக்கு முன்னரே சங்கர் சோகத்துடன் வந்து உட்கார்ந்திருந்தாள்.  அதைப் பார்த்ததுமே ஜெயந்திக்கு கண்களில் கண்ணீர் மழை பொழிய அவனிடம் போய் அமர்ந்தாள்.  அதற்குப் பின் அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை சொல்ல வேண்டுமா என்ன?
காதல்களில் இப்படி அடிக்கடி சண்டைகள் ஏற்படுவதும், பின் சமாதானம் ஆவதும் இயல்புதான்.  இப்படிப்பட்ட சின்னஞ்சிறு ஊடல்கள்தான் காதலின் உறுதியை இன்னும் கூடுதலாக்கும்.

ஆனால் உலகில் எல்லா காதலும் இப்படி இருந்துவிட்டால் பிரச்சனை இல்லையே. சில நேரங்களில் ஆரம்ப காலங்களில் தோன்றாத அல்லது தெரியாத சில விஷயங்கள் காதலின் உள்ளே தீவிரமாக இறங்கியதும் தெரியவரும்.  அருகே நெருங்கியபோது சில அதிர்ச்சிகரமான உண்மைகளும் புரியலாம்.

பிடிக்காத அல்லது ஜீரணிக்க முடியாத விஷயங்களைப் பார்த்த பின்னரும், காதலில் தொடர வேண்டும் என அர்த்தம் இல்லை.  இத்தனை நெருங்கிய பின்னரும் விலகிக்கொள்ளலாம்.

ஏனென்றால் சிக்கலான மன நிலையுடன் திருமண பந்தத்தில் நுழைந்தாலும் கண்டிப்பாக விவாகரத்து என்ற நிலையில்தான் வந்து நிற்கப்போகிறது.  அதனால் எப்படிப்பட்ட நேரங்களில் விலகலாம் என்பதை மட்டும் பார்க்கலாம்.