உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கையை வெளியிட்ட சார்ள்ஸ் டார்வின் பிறந்த நாள் இன்று 12-2-2022

#history #International #today
உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கையை வெளியிட்ட சார்ள்ஸ் டார்வின் பிறந்த நாள் இன்று 12-2-2022

சார்ள்ஸ் ரொபர்ட் டார்வின் (பெப்ரவரி 12,1809 - ஏப்ரல் 19,1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப் படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859ம் ஆண்டில் உயிரினங்களின் தோற் றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.

இது மிகவும் புகழ்பெற்ற, புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் கடல் வழியே, எச்.எம்.எஸ். பீகிள் என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவு களுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன.

மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துகள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துகள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவையாகும். "மனிதன், குரங்கிலிருந்து பரிண மித்தவன், உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, 'தக்கன பிழைக்கும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது. அதாவது வலிமையானது உயிர் வாழும் என்றதன் அடிப்படையில் அமைந்தது" என்பன போன்ற புதிய அறிவியல் கோட் பாடுகளை இவர் கண்டறிந்தார்.

டார்வின் 1809 ம் ஆண்டு பெப்ரவரி 12ம் திகதி இங்கிலாந்தில் உள்ள ஷ¤ரூஸ் பெரி (Shrewsbury) என்னுமிடத்தில் பிறந்தார். அவரது தந்தையார் ரொபர்ட் டார்வின் ஒரு மருத்துவர். அவரது பாட்டனாரும் ஒரு மருத்துவரே. டார்வின் மிக இளம் வயதிலேயே தன் அன்னையை இழந்து விட்டார். ஷ¤ரூஸ்பெரியில் தொடக்கக் கல்வியைக் கற்றார். சிறு வயது முதற் கொண்டே விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியன மீது அவர் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.

தந்தையின் ஆலோசனையை ஏற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். டார்வின் படிப்பில் சிறந்து விளங்கிய அவரது ஆர்வமெல்லாம் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆய்விலேயே மிகுந்திருந்தது. தமது 22ம் வயதில் இறையியலில் பட்டம் பெற்றார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த ஜோன் ஹென்ஸ்லோ என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின்.

அவர் மூலமாக கேப்டன் ரொபர்ட் பிட்ஸ்ராய் என்பவரின் நட்பு கிட்டியது. தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய HMS Beagle என்ற கப்பல் புறப்படவிருந்தது. கேப்டன் ரொபர்ட் பிட்ஸ்ராயின் தலைமையில் செல்லவிருந்த அந்தப் பயணத்தில் கலந்து கொள்ளுமாறு டார்வினுக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக் கொண்டு 1831ம் ஆண்டு டிசம்பர் 27ம் திகதி கேப்டன் பிட்ஸ்ராயும், டார்வினும் பயணத்தைத் தொடங்கினர்.

இரண்டாண்டுகளில் திரும்புவது என்ற முடிவோடு தங்கள் பயணத்தினைத் தொடங்கினர். ஆனால் ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பயணம்தான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. அந்தப் பயணத்தைத் தொடங்கிய போது டார்வினுக்கு வயது 22. ஐந்து ஆண்டுகளில் அந்தக் கப்பல் உலகையே ஒரு தடவை வலம் வந்தது. இடர் மிகுந்த கடற்பயணத் தைச் சார்ள்ஸ் டார்வின் மிகுந்த துணிச்சலுடன் மேற்கொண்டார். பயணத் துன்பத்தைப் பற்றிக் கவ லைப்படாமல், தற்போது காணக் கிடைக்காத பல உயிரினங்களின் எலும்புகளை ஏராளமாகச் சேகரித்தார்.

ஊர்வன, பறப்பன, நடப்பன என்று எல்லா உயிரினங்களின் வாழ்க்கையும் இடத்துக்கிடம் ஒற்றுமையும், வேற்று மையும் கொண்டிருப்பதைக் கண்டு டார்வின் வியப்படைந்தார். இத்தகைய ஒற்றுமை, வேற்றுமைகளைப் புரிந்து கொள்ள உயிரினங்கள் அனைத்தும் பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்களா என்பதையும், மேலும் அவை தொடர்ச்சியான சிறு, சிறு மாற்றங்களோடு இன்றைய வளர்ச்சியைப் பெற்றுள்ளனவா என்பதையும் தெரிந்து கொள்வது இன்றியமையாதது என்று அவருக்குத் தோன்றியது. "உயிரினங்களில் ஏற் படும் மாற்றங்கள் எப்படி, ஏன் ஏற்படுகின்றன?" என்ற வினாவிற்கு விடை காணும் ஆர்வம் டார்வினுக்கு ஏற்பட்டது.

இந்நாளில் காணவியலாத, மறைந் துவிட்ட உயிரினங்களையும், மற்றும் இப்போது உயிரோடிருக்கின்ற உயிரி னங்களையும் அவற்றின் எலும்புகளின் துணைகொண்டு ஆய்வு செய்யும் முயற்சியில் டார்வின் ஈடுபட்டார். தான் சேகரித்த சில எலும்புகளுக்கு சொந்தமான விலங்குகள் முற்றாக அழிந்து போயிருக்கும் என்று முதலில் யூகித்தார். ஆனால் பின்னர் அந்த விலங்குகளி லிருந்துதான் தற்போதைய சிறிய அளவிலான விலங்குகள் தோன்றியிருக்க வேண்டும் என்று பகுத்தறிந்தார். கெலபகஸ் தீவுகளில் புதிய வகையான பறவைகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அதிசயித்தார்.

இவ்வாய்வின் பயனாக "பரிணாம வளர்ச்சிக் கொள்கை" முடிவுக்கு அவர் வந்தார். இப்படி பல்வேறு ஆராயச்சிகளுக்குப் பிறகு, டார்வின் 1836 ம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார். அமெரிக்கக் கடலோரப் பகுதி மற்றும் ஐரோப்பியத் தீவுகளில் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த டார்வின் ஐந்து ஆண்டுகளில் தான் சேகரித்த விபரங்களையும், தமது கண்டுபிடிப்புகளையும் ஆய்வுக் கட்டுரையாக எழுதி The voyage of the Beagle என்ற நூலை லண்டனில் வெளியிட்டார். 1859ம் ஆண்டு பரிணாமக் கொள் கையை, டார்வின் உலகை வியப்பில் ஆழ்த்திய ஒரு புத்தகம் மூலம் வெளி யிட்டார்.

'இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம்' என்ற அந்த புத்தகம் கூறிய கொள்கைதான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை. அதன் படி உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும். இது புதிய இனங்களின் உருவாக்கத்திற்கு வழியேற்படுத்தும் என்று கூறினார். இக்கருத்துகளின் அடிப்படையிலேயே உயிரினங்களில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.