சீர்காழி ஓட்டு எண்ணும் மையத்தில் முகவர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த காணொளி திரை காட்சிகள் நின்றதால் பரபரப்பு
தமிழகம் முழுவதும் கடந்த 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று அதன்படி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு 36 வாக்குச்சாவடி மையங்களில் பதிவு செய்யப்பட்ட 36 வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக சீர்காழி ஊழியக்காரன் தோப்பில் உள்ள சபாநாயகம் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள காட்சிகளை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளி வளாகத்திற்குள் பெரிய அளவிலான காணொளி திரை வைக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளரின் ஆதரவாளர்கள் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென வேட்பாளர் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த காணொளி திரை பழுதானதால் சுமார் ஒரு மணி நேரம் ஒன்றும் தெரியாததால் அதிர்ச்சி அடைந்த அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், பாரதிய ஜனதா கட்சி, மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அறிந்த சீர்காழி தாசில்தார் சண்முகம், சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக், தேர்தல் நடத்தும் அலுவலர் இப்ராஹிம் ஆகியோர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்களிடம் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த காணொளி திரை காட்சிகள் ஏதும் இல்லாமல் சுமார் ஒரு மணி நேரம் நின்றுவிட்டதால் அந்த சமயத்தில் தவறுகள் ஏதாவது நடந்து இருக்கக் கூடும் எனக்கூறி வேட்பாளர்கள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் பதிவான காட்சிகளை மீண்டும் தங்களிடம் காட்டவேண்டும் என கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிவான காட்சிகளை விளக்கி கூறியதன் பேரில் வேட்பாளர்கள் மற்றும் அவரது முகவர்கள் ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பதட்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.