உலகத் தாய்மொழி தினம் பெப்ரவரி 21-2022, இன்று கொண்டாடப்படுகின்றது.
தமிழ் பேசினாலும் கேட்டாலும் இனிமை தரும் மொழியாய் திகழ்வதாலேயே மகாகவி பாரதியார், 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடியுள்ளார்.
மொழி நம் பண்பாட்டின் விழி. மொழியில்லாத வாழ்க்கை ஒளியில்லாத வாழ்க்கை போன்றது. அறிதவதற்கும் தெரிவதற்கும் புரிந்துகொள்வதற்கும் காரணமாக அமையும் உயிர் ஊடகமே மொழி ஆகும். அறிவின் வளர்ச்சி தாய்மொழியால் மட்டுமே சாத்தியம்.
நடைமுறைக் கல்வி, வழிக்காட்டல் மற்றும் கல்வியின் பிரதிபலன் என்பதே இந்த வருடத்திற்கான தொனிப்பொருளாக காணப்படுகின்றது.
1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்பட்டு சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ அமைப்பு ) 1999ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி நடைபெற்ற பொது மாநாட்டில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது.
பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெஸ்க்கோ அறிவித்தது.
2000 ஆம் ஆண்டு முதல் இந்நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகில் தற்போது 7000 இற்கும் அதிகமான மொழிகள் பயன்படுத்தப்படுவதாகவும், அவற்றில் 50 வீதமான மொழிகள் அழிந்து செல்லும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது