வலிமை திரைப்படத்தில் மெட்ரோ திரைப்பட கதை கதாபாத்திரங்களை பயன்படுத்தியதாக 1 கோடி ரூபாய் நஷ்டஈடு
'வலிமை' படம் வெளியான சமயத்திலே 'மெட்ரோ' படத்தின் கதையை போன்றே இருப்பதை போல் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் 'மெட்ரோ' படத்தின் கதை, கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக கூறி, ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் ஹெச். வினோத் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், தங்களின் மெட்ரோ படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த படத்தை தயாரித்த ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெயகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மெட்ரோ படத்தில் வசதியான வாழ்வுக்காக, சங்கிலி பறிப்பு, போதைப் பொருள் கடத்தலில் தம்பிக்கு தொடர்புள்ளதை அறிந்து கொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வது போல காட்சிப்படுத்தப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
மெட்ரோ படத்தை இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் தயாரிக்க உள்ள நிலையில், அதே கதை, கதாபாத்திரங்களுடன் படமாக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், 'வலிமை' படத்தை தன்னுடைய படத்துடன் ஒப்பிடுவது குறித்து 'மெட்ரோ' இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கூறும் போது, 'இந்த இரண்டு படங்களையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு கூறுவது துரதிர்ஷடவசமானது. என்னை பொறுத்தவரை இதை நான் தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வாக தான் பார்க்கிறேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் 'மெட்ரோ' பட தயாரிப்பாளர் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.