காதலை எதிர்க்கும் பெற்றோர்கள் சொல்லும் காரணங்கள். அதையிட்டு காதலை தொடரலாம். காதல் விதிகள். பாகம் - 15
உங்கள் மனம் கவர்ந்தவரையோ அல்லது அவர் குடும்பத்தாரையோ, உங்கள் நல்வாழ்வுக்கு லாயக்கில்லாதவர்கள் என்று பெற்றோர் குற்றம் சாட்டலாம். அவர்கள் சொல்வதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதோ என்று முதலில் எவ்விதமான பதற்றமும் இல்லாமல் ஆராய வேண்டியது முக்கியம். ஏனென்றால் இது உங்கள் எதிர்காலம் சம்பந்தப்பட்டது.
உங்கள் மனம் கவர்ந்தவர் பற்றி உங்களுக்குத் தெரியாத பல விஷயங்களைப் பெற்றோர் அறிந்தோ, தெரிந்தோ வைத்திருக்கலாம்.அவற்றைக் கண்மூடித்தனமாக எதிர்க்கவும் வேண்டியதில்லை; நம்பவும் வேண்டியதில்லை. பெற்றோர் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் காதலிப்பவரிடம் உரிய விளக்கம் கேட்டு, பின் காதலைத் தொடரலாம் அல்லது விலகலாம்.
ஒருவேளை பெற்றோர் சொல்வது உண்மையாக இல்லாதபட்சத்தில் அதை மிகத் தெளிவாக விளக்கிச் சொல்லி,அவர்களது சந்தேகத்தை தீர்க்க வேண்டியது உங்கள் கடமை. அதாவது நீங்களும் பெற்றோரும் எதிர்கால நலனுக்காக இதனை எதிர்கொள்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்வது அவசியம்.
குணம் மாறிப் போச்சு
‘உன்னய சின்னபுள்ளென்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா இப்படிச் சொல்லி குண்டு போடுறியே!’
‘எவ்வளவு நல்ல பிள்ளையா இருந்த உன்னய கெடுத்தது யாரு?’
‘யார் சொல்லிக் கொடுத்து இப்படி பேசுற?’
‘அம்மா அப்பான்னா உனக்கு உயிராச்சே. எங்களுக்கு எதிரே யாரு திருப்பிவிட்டது?’
‘பால்போல் பிள்ளை நெஞ்சுல நஞ்சைக் கலந்துட்டாங்களே’ என்று பெற்றோர் குற்றம் சாட்டுவதுண்டு.
அதாவது, தங்கள் பிள்ளைகளை நல்லவரென்றும், அவரை யாரோ கெடுத்துவிட்டார்கள் என்றும் குற்றம் சாட்டுவார்கள். இது ஒருவகையில் பிரித்தாளும் சூழ்ச்சி. இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பலியாகிவிடாதீர்கள்.
காதல் என்பது இருவர் இணைந்து ஈடுபடும் ஒரு ஒப்பந்தம். இதற்கு யாராவது ஒருவர் கரணம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடாதது, ஏற்றுக்கொள்ள முடியாதது. இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சொல்லும்போது, மிகத் தெளிவாக, மிகத் தைரியமாக உங்கள் காதல் மீதான உறுதி மற்றும் ஈடுபாட்டைத் தெரியப்படுத்துங்கள். இதில் உங்கள் பங்கு என்பது என்ன என்பதையும் சொல்லுங்கள். இப்படிப்பட்ட எதிர்ப்பை ஏற்றுக்கொள்ளமுடியாது என தீர்மானமாகச் சொல்லிவிடுங்கள்.
காரணமில்லாத காரணங்கள்
ஏன் எதிர்க்கிறோம் என்பது தெரியாமலே எதிர்ப்பார்கள் சில பெற்றோர்கள். தங்களை மீறி ஒரு விஷயம் நடக்கிறது என்ற அதிர்ச்சியில் யாரை காதலிக்கிறார், எப்படி காதல் வந்தது என எதைப் பற்றியுமே யோசிக்காமல் தீவிரமாக எதிர்ப்பார்கள். கண்மூடித்தனமாக கோபப்படுவார்கள். அடி உதை விழலாம்.
இப்படிப்பட்ட பெற்றோரிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்ததுபோலவே உங்களுக்கும் திடீர் அதிர்ச்சியைக் கொடுக்க நினைப்பார்கள். உடனே யாரையாவது பிடித்துவந்து திருமணம் செய்துவைக்க நினைப்பது, வீட்டுக்குள் அடைத்துவைத்து வெளியே விடாமல் தடுப்பது போன்ற முயற்சியில் ஈடுபடுவார்கள்.
இப்படிப்பட்ட தீவிரத்தைக் குறையவைப்பதுதான் உங்கள் முதல் வேலையாக இருக்க வேண்டும். பெற்றோர் கவனம் உங்கள் காதலை விட்டு விலகிய பின்னர் காதலை எப்படி நிறைவேற்றிக்கொள்வது என யோசித்து மிக நிதானமாக செயல்படுத்த வேண்டும்.
ஆக்கபூர்வமான நல்ல யோசனைகள் அல்லது உங்கள் விருப்பமானவர் பற்றி மிகச் சரியான விமர்சனங்களை சொல்லும்போது காதுகொடுத்துக் கேளுங்கள். அவர்களது ஆலோசனைகள் உண்மையாக இருந்தால் பெற்றோர்களுக்காக காதலை கைவிடலாம். ஆனால் என்ன காரணத்துக்காக காதலில் இருந்து விலகுகிறீர்கள் என்பதைத் தெளிவாக உங்க விருப்பமானவரிடம் சொல்லி நட்பாகவே பிரியுங்கள்.