டெலிகிராம் செயலிக்கு தடை விதித்த பிரேசில்

#Social Media #Telegram #Brazil
Prasu
2 years ago
டெலிகிராம் செயலிக்கு தடை விதித்த பிரேசில்

பிரேசிலின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்தினால் பிரேசிலில் டெலிகிராம் செயலிக்கு தடை விதித்துள்ளார். அக்டோபரில் நடைபெற இருக்கும் மறுதேர்தலுக்கு டெலிகிராமை ஒரு கருவியாக பயன்படுத்த நினைத்த பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோவுக்கு இந்த தடை அதிர்ச்சியாக அமைந்துள்ளது. டெலிகிராமில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை பின்தொடர்கின்றனர்.

இதுகுறித்து நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் தன்னுடைய தீர்ப்பில், பிரேசில் அதிகாரிகளின் கோரிக்கைகளை டெலிகிராம் பலமுறை புறக்கணித்துள்ளது. குறிப்பாக சில கணக்குகளை முடக்க டெலிகிராம் மறுத்துள்ளது. மேலும் போல்சனாரோவின் கூட்டாளியான ஆலன் டாஸ் சாண்டோஸ் குறித்த தகவல்களை வழங்க மறுத்துள்ளது என்று கூறியுள்ளார். அலன் டாஸ் டெலிகிராமில் சில பொய்யான கருத்துகளை பரப்பி வந்துள்ளார்.

வாட்ஸப் செயலி செய்தி பகிர்வு குறித்த கொள்கைகளை சமீபத்தில் மாற்றியது. இதனால் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் பலர் டெலிகிராமில் இணைந்துள்ளனர். அதிபர் போல்சனரோ, அலெக்ஸாண்ட்ரே டி மோரேசின் இந்த தீர்ப்பு பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.