காதலை எதிர்க்கும் பெற்றோர்கள் சொல்லும் காரணங்கள் சாதி, மதம். காதல் விதிகள். பாகம் - 16.
இந்தக் காரணத்தைச் சொன்னார்கள் என்றால், இது உங்களுக்கு கண்டிப்பாக அதிர்ச்சியாக இருக்காது. ஏனென்றால், இதை நீங்கள் பார்வை நிலை முடிந்து பேச்சு நிலை தொடங்கிய காலத்திலேயே யோசித்துப் பார்த்துவிட்டீர்கள். சாதி, மதம் இரண்டையும்விட, காதல்தான் பெரிது என எப்போதோ முடிவெடுத்து அதனை செயல்படுத்தி வருகிறீர்கள்.
அதனால் உங்களுக்கு சாதி, மதம் போன்றவற்றில் எவ்வித நம்பிக்கையும் இல்லை, இவை வாழ்வெல்லாம் நம்முடன் வர போவது இல்லை என்பதை பெற்றோரிடம் நிதானமாகத் தெரியப் படுத்துங்கள். சாதி, மதம் போன்றவற்றில் காரணமாக கட்டினால், கண்டிப்பாகக் காதலைக் கைவிடமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிடுங்கள்.
சாதி, மதம் போன்றவை இந்த நூற்றாண்டில் தேவையில்லாத ஒரு பிரச்சனை என்பதை தைரியமாக எடுத்துச் சொல்லுங்கள். இத்தனை வருடம் கடைப்பிடித்து வந்த சம்பிரதாயங்களை உடனே உங்க காதலுக்காக அவர்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் அல்லது ஏறிய வேண்டும் என்றும் எதிர்பார்க்காதீர்கள். பெற்றோர் மனம் நிச்சயம் மாறும் என்று ஆவலுடன் காத்திருங்கள்.
அறியாமை, செக்ஸ் உணர்வு
இந்த வயதில் செக்ஸ் உணர்வுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதனால் அந்த உணர்வை, அந்த அறியாமையைக் காதல் என்று தவறுதலாக நினைத்துவிட்டாய்’ என பெற்றோர்கள் பேசுவார்கள்.
‘மனமுதிர்ச்சி அடையாதவர்கள் மட்டுமே இதுபோன்று அறியாமை மற்றும் செக்ஸ் ஆர்வத்தினால் காதலில் விழுவார்கள். நான் மிகவும் நிதானமாக காதலில் இறங்கியிக்கிறேன். இதில் எவ்விதமான அறியாமையும் இல்லை. மனம் விரும்புபவரை மிகத் தெளிவாக ஆராய்ந்தே தேர்வு செய்திருக்கிறேன்’ என்று நிதானமாக எடுத்துச் சொல்லுங்கள்.
அந்தஸ்து
ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒருவிதமான மரியாதை இருக்கத்தான் செய்கிறது. மூதாதையர்கள் கொடுத்த செல்வம் மட்டுமல்ல. அவர்கள் தந்த பெயரும் குடும்பத்துக்கு பக்கபலமாக இருப்பது உண்டு. அதனால் அப்படிப்பட்ட குடும்பத்தில் திடீரென காதல், கல்யாணம் என்றால் இத்தனை நாள் கட்டிக் காப்பாற்றி வாய்த்த அந்தஸ்து பறந்துபோய்விடுமே என பயப்படுவது சகஜம். அதுபோன்ற சமயத்தில் உங்கள் குடும்ப அந்தஸ்து, காதல் மூலமாக இன்னும் சிறப்புடையுமே தவிர, குடும்ப மானம் காற்றில் பறக்காது என்பதைத் தெளிவாக்க வேண்டியது
உங்கள் கடமை.
‘காதல் திருமணம் செய்து, அன்போடு தொடர்ந்து சேர்ந்து வாழ்வது, பெண்மைக்கு மரியாதை தருவது, உறவினருக்கு மதிப்பளிப்பது, கைமாறு கருதாது உழைப்பது போன்றவற்றில்தான் குடும்ப மானம் இருக்கிறது. இந்த திருமணத்தால் நமது குடும்பம் புதுமைகளை வரவேற்கக்கூடியது என்ற பெயரும் வாங்கட்டும்’ என்று சொல்லி சமாளியுங்கள். அவர்கள் சொல்வதையும் காது கொடுத்து கேட்டுக் கொள்ளுங்கள். அவர்களை முதலில் பக்குவப்படுத்துங்கள்.
காதல் எதிர்ப்பு
குடும்பத்தில் உடம்பிறந்தோர் அல்லது உறவினர் யாராவது காதலில் தோல்வி அடைந்திருக்கலாம். அல்லது பெற்றோரை மதிக்காமல் ஓடிபோய், வீட்டில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்திருக்கலாம். அதனால் மீண்டும் அப்படி ஒரு சூழல் வந்துவிடக் கூடாது என்று பயந்து, காதலுக்கு வீட்டில் தடை போட்டிருப்பார்கள்.
பெற்றோருக்கு மன வருத்தம் தரக் கூடாது என நினைத்தால், காதலை விட்டுத்தர வேண்டியதுதான். இல்லாதபட்சத்தில், உங்கள் காதலின் பெருமையை வீட்டாருக்கு உயர்த்திக் காட்டி சம்மதிக்கவைக்க வேண்டிய பெரும் கடமை உங்களுக்கு இருக்கிறது. இதற்கு நீங்கள் மட்டும் ஒத்துழைத்தால் போதாது.
உங்கள் மனம் கவர்ந்தவர் மற்றும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து ஒத்துழைத்தால் மட்டுமே, பெற்றோரிடம் சம்மதம் பெற இயலும்.