சிவ வழிபாட்டில் பயன்படும் வில்வ மரத்தின் குணநலன்கள யாது தெரியுமா?

#Health #herbs #Benefits
சிவ வழிபாட்டில் பயன்படும் வில்வ மரத்தின் குணநலன்கள யாது தெரியுமா?

நம் முன்னோர் இறை வழிபாட்டில் நம் ஆரோக்கியத்துக்கான மருத்துவத்தை மறைபொருளாகப் புகுத்தியுள்ளனர். இறைவனின் அனுக்கிரகமும் இறைவனால் படைத்தளிக்கப் பெற்ற இயற்கையின் ஆதரவும் நமக்குக் கிடைக்கும்போது ஆரோக்கியமும், ஆனந்தமும் நம்மிடம் நிலைபெறும் என்பதில் ஐயமில்லை. அவ்வழியில் வில்வத்தை சிவ வழிபாட்டில் இணைத்ததும் இவ்வுலக உயிர்கள் உய்யும் பொருட்டே ஆகும்.

கூவிளம் என்னும் பெயராலும் தமிழில் வில்வம் குறிப்பிடப்பெறும். Aegle marmelos என்னும் தாவரப் பெயரை உடையது. Bael (பேல்) என்றும் Holy fruit tree (புனிதக்கனி தரும் மரம்) என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப் பெறும். இது வடமொழியில் பில்வா என்றும், தெலுங்கு மொழியில் பில்வமு என்றும், மலையாள மொழியில் கூவளம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

வில்வம் கிளைகளோடு உயர்ந்து வளரக்கூடிய ஒரு மரம் ஆகும். இதன் அடிமரம் பருத்து, பட்டை பிளவுபட்டு சற்று வெண்மை நிறம் கொண்டிருக்கும். இதன் அடிமரத்தில் முட்கள் இருக்காது. ஆனாலும் இதன் இளங்கிளைகளில் நீண்ட கூர்மையான முட்கள் இருக்கும். ஒவ்வொரு காம்பிலும் மூன்று இலைகள் இருக்கும்.  இதன் இலைகள் அகலமாகவும், கூர்மையாகவும் இருக்கும். இதன் இலைகள் மணம் மிக்கவை. கசக்கி முகர்கையில் கற்பூரத்தைப் போல சுகமான மணத்தைத் தரக்கூடியவை.

வில்வம் வைகாசி மாதத்தில்(மே - ஜூன் காலகட்டத்தில்) பூக்கும் தன்மையது. இதன் பூக்கள் வெண்ணிறம் உடையவை, மணம் மிக்கவை. வில்வத்தின் காய்கள் பசுமை நிறத்தையும், நன்கு முற்றிப் பழுத்த நிலையில் மஞ்சள் நிறத்தையும் பெற்றிருக்கும். வில்வத்தின் கனி விளாம்பழத்தின் ஓட்டினைப் போன்று வலுவானதாய் இருக்கும். வில்வப் பழத்துக்குள் பளபளப்பும், பிசுபிசுப்பும் உடைய சதைப்பற்றும், வெண்ணிற விதைகளும் நிறைந்திருக்கும்.

வில்வத்தில் பல வகைகள் உண்டு. அவற்றுள் காட்டு வில்வம் மற்றும் தோட்ட வில்வம் எனும் இவை இரண்டும் குறிப்பிடத்தக்கவை ஆகும். காட்டு இன வில்வம் வட இந்தியாவிலும், மத்திய இந்தியாவிலும் பயிராகக் கூடியது.  இதன் கனிகளில் விதைகள் மிகவும் குறைவாக இருக்கும்.  வில்வக்கனி சற்று மயக்கம் தரும் தன்மையது. வில்வக் கனியை சர்பத்தாகக் குடிப்பது வழக்கம். இதன் உட்சதையை நீக்கிய ஓட்டை மருந்துகள் வைக்கும் குப்பிகளாகப் பயன்படுத்துவர்.  வில்வம் பற்றிய மருத்துவப் பாடல் ஒன்று.

‘வில்வத்தின் வேருக்கு வீறுகுன்ம வாயுகபம்
சொல்லவொணா பித்தந் தொடர்சோபை - வல்லகப
தாகசுரம் நீரேற்றஞ் சந்நியோடு மெலய்வலியும்
வேகமொடு நீங்குமே’

வில்வத்தின் வேரை மருந்தாக உள்ளுக்குப் பயன்படுத்தும்போது குன்மம் என்னும் குடற்புண், வாயுக்கோளாறுகள், சீதள நோய்கள், பித்தத்தில் உண்டான நோய்கள், தொடர்ந்து நின்று தொல்லை தருகிற ரத்தசோகை, சீதளத்தில் உண்டான நா வறட்சி, மிகுதாகம், காய்ச்சல், தலை நீரேற்றம், சந்நி சுரம், உடல் முழுதும் வலியுற்ற நிலை இவை அத்தனையும் வேகமாய் விலகிப் போகும் என்பது மேற்கண்ட பாடலின் பொருளாகும்.

வில்வத்தின் மருத்துவ குணங்கள்

  • வில்வத்தில் பொதிந்து இருக்கும் டேனின் என்னும் மருத்துவ வேதிப்பொருள் வயிற்றுப் போக்கு, ஊழிப்பெருநோய் எனப்படும் வாந்திபேதி(காலரா) ஆகிய நோய்களைப் போக்கும் தன்மை உடையது.
  • உலர்ந்த வில்வ இலையின் சூரணம் நாட்பட்ட கழிச்சலை கண்டிக்கவல்லது. முற்றிய பழுக்காத வில்வக் காய்களினின்று பெறப்படும் சத்துவம் ரத்தப்போக்கையும்(Haemorrhoids) தோலின் மேற்பற்றிய வெண்திட்டுக்களையும் (Vittiligo) குணப்படுத்தக்கூடிய
  • மருந்தாகும்.
  •  மேலும் இது ரத்த சோகையையும் கண், காது ஆகிய உறுப்புகளில் ஏற்படும் பல்வேறு நோய்களையும் குணமாக்கும் தன்மையது.
  • நம் முன்னோர்கள் உடைந்த எலும்புகளை விரைவில் ஒன்று சேர்க்க உலர்ந்த முற்றிய வில்வக் காய்களைச் சூரணித்து மஞ்சள் தூளும் நெய்யும் சேர்த்து விழுதாகக் குழைத்து மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுத்தியதாகத் தெரிய வருகிறது. *வயிற்றில் அமிலத்தன்மை மிகுதியால் ஏற்படும் குடற்புண்ணை(Ulcer)

ஆற்றும் வல்லமை உடையது.

  • வில்வப்பழம் நுண்கிருமிகளைப் போக்கும் மருத்துவ குணம் வாய்ந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உடலில் ஏற்படும் பல தொற்று நோய்க் கிருமிகளான பூஞ்சைக் காளான்கள், நுண் நோய்க்கிருமிகள் ஆகியனவற்றை எதிர்த்து நின்று உடலுக்கு நலம் தரவல்லது என்றும் தெரிவிக்கின்றனர்.
  • வைட்டமின் ‘சி’ சத்துக் குறைபாட்டால் ஏற்படுகிற ரத்தசோகை, சோர்வு, அசதி, எங்கேனும் குருதி வெளிப்பாடு, கை, கால்களில் தோன்றும் வலி, உடலின் சில பகுதிகளில் ஏற்படும் வீக்கம், ஈறுகளில் புண்கள் உண்டாகுதல் அதன் விளைவாக ஏற்படும் பற்களின் ஆட்டம் ஆகியவற்றை சரி செய்யும் அளவுக்கு வில்வப் பழத்தில் வைட்டமின் சி சத்துவம் செறிந்துள்ளது.
  • ரத்தத்தில் மிகுந்த கொழுப்புச் சத்தைக் குறைக்கும் திறன் வில்வ இலைக்கு உண்டு.
  • வில்வத்தினின்று பெறப்படும் எண்ணெய் ஆஸ்துமா என்னும் சுவாசக் கோளாறுகளையும் நுரையீரல் பற்றிய நோய்களையும் நீக்கும் தன்மையது. இந்த எண்ணெயை தலைக்குக் குளிக்குமுன் சிறிது நேரம் தலையில் தேய்த்து வைத்திருந்து குளிப்பதால் தலை நீரேற்றம் என்னும் சைனஸ் பிரச்னை தவிர்க்கப்படுகிறது.
  • வில்வ இலையை மேற்பற்றாகப் பயன்படுத்தும்போது வீக்கத்தை வற்றச் செய்யும் வல்லமை உடையது.
  • வில்வம் மலச்சிக்கலைப் போக்குவதற்கு இயற்கை நமக்களித்த இன்மருந்து என்றால் அது மிகையாகாது. வில்வப் பழத்தை சர்பத்தாகவோ அல்லது அதன் சதைப்பற்றோடு மிளகும் உப்பும் சேர்த்தோ அடிக்கடி உண்பதால் மலச்சிக்கல் மறைகிறது. இதனால் குடலைப் பற்றித் துன்பம் செய்யும் நச்சுக்கள் (Toxins) வெளித்தள்ளப் படுகின்றன.
  • வில்வம் ஒரு சிறந்த மலமிளக்கி-யாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகாத வண்ணம் வைத்துக் கொள்ள உதவுகிறது.
  • வில்வம் என்புறுக்கி நோய் என்கிற Tuberclosis மற்றும் கர்ப்பப்பையைச் சார்ந்த நோய்களையும் குணப்படுத்தக் கூடியது.
  • வில்வம் சிறுநீரகக் கோளாறுகளை சீர்செய்யக் கூடிய சிறந்த மருந்தாகிறது.
  • வில்வக் கனி பசியைத் தூண்டக்கூடியது, குமட்டலைத் தடுக்கக் கூடியது.
  • வில்வக்கனிச் சாறு இதயம் மற்றும் மூளைக்குத் தேவையான சத்துக்களைத் தந்து அவற்றை பலப்படுத்தக் கூடியது.
  • வில்வத்தில் அடங்கியுள்ள Marmelosin எனும் வேதிப்பொருள் இதய பலவீனத்தையும் படபடப்பையும் போக்கவல்லது.
  • பூக்களைக் கொண்டு தயாரிக்கப் படும் தீநீர் காக்காய் வலிப்புக்கு மருந்தாகிறது.
  • வில்வ இலைகள் குடற்புண், மஞ்சள் காமாலை, வெள்ளைப்போக்கு, புண்கள், காது மந்தம், கண்நோய்கள்  ஆயவற்றைப் போக்கும் தன்மையது.
  • வில்வத்தில் பீட்டா கெரோட்டின், வைட்டமின் பி, வைட்டமின் சி, ரிபோஃப்ளேவின், கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியன
  • மிகுந்துள்ளன.

வில்வம் மருந்தாகும் விதம்

  • அன்றாடம் காலையில் 20 மிலி வில்வ இலைச்சாறு பருகுவதால் ரத்தத்தில் கலந்த அதிகமான சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திடவும், அதி மூத்திரம் அல்லது வெகு மூத்திரம் என்கிற சிறுநீர்த் தொல்லைகளினின்று விடுதலை பெறவும் உதவும்.
  • உலர்ந்த வில்வ இலைகளைச் சூரணித்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நீரிலிட்டு நன்கு காய்ச்சி வடித்து எடுத்துக் கொண்டு அந்தி சந்தி என தினம் இரண்டு முறை பருகி வருவதால் உயர் ரத்த அழுத்தம் தணியும்.
  • அன்றாடம் இரவு உணவுக்குப் பின் நன்கு பழுத்த வில்வப் பழச் சதையை, ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து அதனோடு சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வருவதால் ஆரம்பகால புற்றுநோய் மற்றும் காசநோய் ஆகியன குணமாகும். குறைந்தது ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வருவது நலம் பயக்கும்.
  • வில்வ இலைச் சூரணம் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேன் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வருவதால் பசியின்மையைப் போக்கும். பசி தூண்டப் பெறும்.
  • வில்வப் பழச் சதையை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவு சூரணத்தை எடுத்து தேன் அல்லது வெந்நீர் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை என இரண்டு அல்லது மூன்று நாட்கள் சாப்பிட்டு வர குடலில் தங்கி குற்றம் விளைவிக்கும் புழுக்கள் வெளியேறி ஆரோக்கியம் நிலைபெறும்.
  •  வில்வ இலைகளை அரைத்து விழுதாக்கி 5 கிராம் அளவுக்கு எடுத்து அதனோடு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அந்தி சந்தி என அன்றாடம் இருவேளை சில நாட்கள் சாப்பிட்டு வர ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பு நோய் குணமாகும்.
  • இளம் வில்வ இலைகளை 10 அல்லது 15 கிராம் அளவு எடுத்து அதனுடன் 10 மிளகு சேர்த்து உறவாடும்படி அரைத்து அந்தி சந்தி என இருவேளை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.
  • வில்வப் பழச் சூரணத்தை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பசும் பாலில் இட்டுக் காய்ச்சி, இனிப்பு சேர்த்து தினமும் இருவேளை பருகிவர ரத்தசோகை குணமாகும்.
  • கருவுற்ற தாய்மார்கள் ஒரு தேக்கரண்டி வில்வப்பழச் சூரணத்தைத் தேன் சேர்த்து சாப்பிட்டு வர (தினம் இரு வேளை) கர்ப்ப கால வாந்தி, குமட்டல் குணமாகும். ரத்த சோகையும் போகும்.
  • ஒரு கைப்பிடி வில்வ இலைகளை எடுத்து சுத்திகரித்து நீர் விடாமல் அரைத்து விழுதாக்கி, பின் ஒரு கோப்பை நீரிலிட்டு கொதிக்க விட்டுக் குழம்பு பதத்தில் வந்ததும் எடுத்து, தேன் சேர்த்து இரண்டு அல்லது மூன்று வேளைகள் என தினமும் சில நாட்கள் சாப்பிட்டு வருவதால் டைபாய்டு என்னும் குடலைப் பற்றி வருகிற காய்ச்சல் விரைவில் தணிந்து சுகம் ஏற்படும்.
  • ஒரு நெல்லிக்காய் அளவு வில்வப்பழச் சதையோடு கற்கண்டு சேர்த்து அன்றாடம் இரவு படுக்கைக்குப் புகுமுன் சாப்பிட்டு வருவதால் மன ஒருமைப்பாடும், ஞாபக சக்தியும் மிகும்.
  • தினமும் காலையில் ஐந்தாறு வில்வ இலைகளை மென்று சுவைத்து விழுங்குவதால் சர்க்கரை நோய்
  • மட்டுப்படும்.
  • வில்வப்பழச் சதையை எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு 10 கிராம் சூரணத்தோடு 50 கிராம் அளவு பசு நெய்யும், அரை தேக்கரண்டி அளவு மஞ்சள் தூளும் சேர்த்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து ஓரிரு முறை சில தினங்கள் பருகிவர அடிபட்டதால் ஏற்பட்ட எலும்புமுறிவுகள் விலகி எலும்புகள் இணைந்து பலம் பெறும்.
  • வில்வ இலையைச் சாறு எடுத்து உடலில் சிறிது நேரம் பூசி வைத்திருந்து குளிப்பதால் உடலின் துர்நாற்றம் விலகி நறுமணம் உண்டாகும். ஆரம்ப கால தோல் நோய்கள் அத்தனையும் விலகிப் போகும்.
  • வில்வ இலையை தளிராக எடுத்து சிறிது விளக்கெண்ணெய் இட்டு வதக்கி, ஒரு சேலையில் முடித்து கண்களுக்கு ஒற்றடமிட கண் நோய்கள் விலகும்.முப்பெரும் தெய்வங்களுள் முதன்மை தெய்வமான சிவபெருமானுக்கு மிகவும் உகந்ததான வில்வம், திருக்கோயில்களில் வைக்கப்பெற்றிருப்பது இறை அருளோடு ஆரோக்கியம் பெறும் பொருட்டே என்பதை இதன் மூலம் புரிந்துகொண்டோம் அல்லவா?!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!