ஹார்மோன் கோளாறு பிரச்னையால் பெண்களை பாதிக்கும் பி.சி.ஒ.எஸ்.
ஐந்தில் ஒரு பெண் பி.சி.ஓ.எஸ் என்ற ஹார்மோன் கோளாறு பிரச்னையால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் உள்ளன. இதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை இல்லாததே முக்கிய காரணம். பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் நிகழக்கூடிய மாதவிடாய் சீராக இல்லாமல் தடைபடுவதும் அல்லது வழக்கத்திற்கு மாறாக அதிக ரத்தப்போக்கை உண்டாக்குவதுதான் பி.சி.ஓ.எஸ். கருப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகள்தான் இதற்கு முக்கிய காரணம். இந்த நீர்க்கட்டிகள் முழுமையாக உடைந்தால்தான் மாதவிடாய் சீராக இருக்கும்.
பி.சி.ஓ.எஸை முற்றிலும் குணப்படுத்த எந்த சிகிச்சைகளும் இல்லாத நிலையில் முறையான வாழ்க்கை முறையே கை கொடுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக அதிக எடை பிரதான காரணமாக இருக்கிறது. மேலும் முகம் மற்றும் உடலில் அதிகப்படியான முடி வளர்ச்சி, முகப்பரு மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். பாலிசிஸ்டிக் ஓவரி நோய் (பி.சி.ஓ.எஸ்) பொதுவாக பெண்களின் இனப்பெருக்க வயதில் நிகழ்கிறது. இந்த பிரச்னை உள்ள பெண்களின் கருப்பையின் இரு பக்கங்களிலும் உள்ள சினைப்பைகளில் சிறிய நீர்க்கட்டிகளின் வளர்ச்சி இருக்கும்.
இதன் விளைவாக கருமுட்டைகள் உருவாக முடியாத நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது. பி.சி.ஓ.எஸ் பெரும்பாலும் வாழ்க்கை முறை தொடர்பான நோயாக வகைப்படுத்தப்படுகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள், உடற்பயிற்சியின்மை, மோசமான வாழ்க்கை முறை, புகைபிடித்தல், மன அழுத்தம் மற்றும் போதிய தூக்கமின்மை போன்ற பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆரம்ப கட்ட அறிகுறிகள்
- ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, தாமதமான சுழற்சிகள், மிகக் குறைந்த கால மாதவிடாய் போன்றவை நீர்க்கட்டி பிரச்னையின் முக்கிய அறிகுறிகள்.
- பெரியவர்களுக்கு மாதவிடாய் காலங்கள் 21 நாட்களுக்கு முன்னதாகவோ அல்லது 35 நாட்களுக்குப் பிறகோ ஏற்படும். அதுவே இளம் பெண்களுக்கு 45 நாட்களுக்கு பிறகு மாதவிடாய் நிகழ்ந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
- உடல் பருமன் மற்றொரு எச்சரிக்கை அறிகுறியாகும். ஏனெனில் பி.சி.ஓ.எஸ் பாதித்த பெண்களில் கிட்டத்தட்ட 40-80 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்கள்.
- ஆண்களின் உடலில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் அதிக அளவில் இருப்பதால் உடலில் முகப்பரு, அதிகப்படியான முடி வளர்வது, குறிப்பாக முகத்தில் ஒரு முக்கிய அறிகுறி.
- உச்சந்தலையில் முடி உதிர்தல் மற்றும் வழுக்கை ஏற்படுத்துவது.
- டைப் 2 நீரிழிவு நோயின் பாதிப்பு. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாதாரண அளவை விட அதிகரிக்கும்.
- உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அதிகரிப்பது.
- மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு, தன்னம்பிக்கை இல்லாமை மற்றும் பதட்டம் போன்றவை பி.சி.ஓ.எஸ்-ன் அறிகுறிகளாகும். மருத்துவ ரீதியாக கண்டறியும் முறை பி.சி.ஓ.எஸ் நோயைக் கண்டறிய திட்டவட்டமான சோதனை எதுவும் இல்லை.
- எனினும் மருத்துவர்கள் பி.சி.ஓ.எஸ் நோயறிதலுக்கு ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனைகளான ரத்த பரிசோதனைகள் மற்றும் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம். வாழ்க்கை முறை மாற்றங்கள் பி.சி.ஓ.எஸ் உயிருக்கு ஆபத்தான நோய் அல்ல. ஆனால் நீண்டகால சிக்கல்களை தவிர்க்க ஆரம்ப கட்டத்திலேயே உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மருத்துவ ரீதியாக சிகிச்சையளிக்க முடியும் என்றாலும், சில எளிய வாழ்க்கை முறை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பி.சி.ஓ.எஸ்-ஐ குணப்படுத்தலாம்.
- சத்தான உணவை உட்கொள்வது மற்றும் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறலாம்.
- பீட்சா, பர்கர் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் வெண்ணெய், சீஸ் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த பொருள்களை சாப்பிடுவதை தவிர்த்து ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதையும் தேர்ந்தெடுப்பது அவசியம்.
- வழக்கமான உடற்பயிற்சி, நடை பயிற்சியில் ஈடுபடுவது ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.
- உங்கள் அன்றாட செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இன்சுலின் அளவை சீராக வைத்துக்கொள்ளலாம். இது உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
- தினசரி 7- 8 மணிநேர இடைவிடாத தூக்கம் பி.சி.ஓ.எஸ் வராமல் தடுக்க உதவும் ஒரு முக்கிய காரணியாகும்.
- மன அழுத்தம் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது, ஆனால் பி.சி.ஓ.எஸ்-ல் இருந்து நீங்கள் குணமடைய விரும்பினால் மன அழுத்தத்தை குறைக்க நேரம் ஒதுக்குவது அவசியமாகும். இதற்கு தினமும் யோகா, நீச்சல் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.