வாட்ஸப்க்குள் கம்யூனிட்டி... எதற்காக இந்தப் புதிய வசதி?
வாட்ஸப்க்குள் கம்யூனிட்டி என்ற புது அப்டேட் அறிமுகமாக உள்ளது. எதற்காக இந்தப் புதிய வசதி அறிமுகமாகிறது? இந்த வசதியால் பயனருக்கு என்ன பயன் என்பதைப் பார்க்கலாம்!
மெசேஜிங் ஆப்கள் பயன்பாட்டில் முன்னிலையில் இருக்கும் வாட்ஸப்பில் அவ்வப்போது புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படுவதுண்டு. அதுபோல வாட்ஸப் கம்யூனிட்டி என்ற முற்றிலும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது மெட்டா நிறுவனம். இந்த புதிய வசதியின் மூலமாகப் பிரிந்து கிடக்கும் பல்வேறு குரூப்களை ஒரே கம்யூனிட்டி டாபிக்-கின் கீழ் ஒன்றாக ஒருங்கிணைத்து விடலாம்.
எடுத்துக்காட்டாக ஒரு அபார்ட்மென்ட்டில் வசிப்பவர்களுக்கு அவர்கள் விளையாடச் செல்லும் நபர்களைக் கொண்ட ஒரு குரூப் இருக்கும், வாக்கிங் செல்பவர்களைக் கொண்ட ஒரு குரூப் இருக்கும். இப்படிப் பல தரப்பு நபர்களைக் கொண்ட குரூப்களையெல்லாம் இனிமேல் ஒன்றாகச் சேர்த்து ' அபார்ட்மென்ட் ' என்ற கம்யூனிட்டியின் பெயரில் ஒன்று சேர்த்து விடலாம்.
இது அட்மின்களின் வேலையை எளிதாக்கும் மேலும் கூடுதலான நபர்களிடையே செய்தியைக் கொண்டு சேர்க்கும். பல்வேறு குரூப்களில் இருப்பவர்களும் ஒவ்வொரு குரூப்பாக தேடத் தேவையிருக்காது. கடந்த சில மாதங்களாகப் பரிசோதனையிலிருந்த வாட்ஸப் கம்யூனிட்டி வசதி இப்போது பயனாளர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர குரூப்பில் அனுப்பப்படும் பிறருடைய மெசேஜ்களையும் அட்மின் டெலிட் செய்யும் வசதி, 2 ஜிபி வரை ஃபைல்களை அனுப்பும் வசதி, மெசேஜ்களுக்கு தனியாக ரியாக்ஷன், மற்றும் 32 நபர்கள் வரை குரூப் ஆடியோ கால் வசதி ஆகியவற்றை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.