மதுரை மேம்பால விபத்து: ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம்! முழு விவரம்

#India #Tamil Nadu
மதுரை மேம்பால விபத்து: ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம்! முழு விவரம்

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விவகாரத்தில் விபத்திற்கு காரணமான ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.3 கோடியும், கட்டுமான ஆலோசனை நிறுவனத்திற்கு ரூ. 40 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை புதுநத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.545 கோடி மதிப்பில் மதுரை தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரை 7.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

2022 ஏப்ரல் மாதம் பணிகளை முடித்து பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், மேம்பாலத்தின் அருகேயுள்ள இணைப்பு பாலத்தின் ஒரு பகுதி 2021 ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை இடிந்து விபத்துக்குள்ளானது.

சரியாக நாராயணபுரம் பகுதியில் பாலத்தின் இரண்டு புறமும் நகருக்குள் செல்பவர்களுக்காக கட்டப்பட்டிருந்த 335 மீட்டர் நீளமுள்ள சர்வீஸ் பாலத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த சர்வீஸ் பாலம் கட்டுவதற்கு 35 மீட்டர் இடைவெளியுடன் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு தூணுக்கும் மற்றொரு தூணுக்கும் இடையே 35 மீட்டர் நீளமுள்ள பாலத்தின் ஒரு பகுதியை, பேரிங் வைத்து இணைப்பதற்கு, ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் பாலத்தை தூக்கியுள்ளனர். அப்போது ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளர் உயிரிழந்தார்
அதைத்தொடர்ந்து விபத்து தொடர்பாக மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளும் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட JMC projects இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் பிரதீப் குமார் ஜெயின், கட்டுமானப்பணிகள் பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக் மெஷின்கள் ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் தரப்பு விளக்கம் கேட்கப்பட்டு, பின் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

விபத்திற்கான காரணம் குறித்து திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர் பாஸ்கர் தலைமையில் 3 வல்லுனர்கள் கொண்ட குழுவினர் 2021 செப்.4 ஆம் தேதி சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து ஒப்பந்த நிறுவனத்தார், திட்ட பொறியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஹைட்ராலிக் இயந்திரத்தின் பராமரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினர். விபத்து ஏற்பட்ட போது பணியில் இருந்தவர்கள் யார் என்று விசாரித்து அவர்களின் விளக்கங்களும் கேட்கப்பட்டன. மேம்பால பணிகளுக்காக போடப்பட ஒப்பந்த அறிக்கைகளையும் ஆய்வு செய்தனர்.

பின்னர் டிசம்பர் மாதம் அதற்கான விரிவான ஆய்வறிக்கையை தேசிய நெடுஞ்சாலை துறை வசம் நிபுணர் குழுவினர் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், "ஹைட்ராலிக் பளு தூக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, பாலத்தில் கர்டர் பொருத்தும் பணிகளில் கூடுதல் அனுபவம் இல்லாத தொழிலாளர்களை பயன்படுத்தியது, கர்டர் பொருத்தும் பணியின்போது தேசிய நெடுஞ்சாலை துறையால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு பொறியாளர்கள் இல்லாதது ஆகியவையே விபத்திற்கு காரணம்” என தெரிவிக்கப்பட்டது.

கட்டுமானம் தொடர்பாக நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் படி, முதலில் இணைப்பு சுவரை கட்டிவிட்டு பின்பு கர்டர் பொறுத்தி, விபத்து நடந்த இடத்தில் வெற்றிகரமாக மீண்டும் கர்டர்கள் பொருத்தப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.

விபத்து தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை துறையால் நியமிக்கப்பட்ட 6 கண்காணிப்பு பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், சம்பவ இடத்தில் பணியில் இல்லாத 2 கண்காணிப்பு பொறியாளர்கள் மட்டும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அறிக்கையின் அடிப்படையில் விபத்துக்கு காரணமான ஒப்பந்த நிறுவனமான JMC projects இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும், கட்டுமான ஆலோசனை நிறுவனத்திற்கும் 40 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேம்பால கட்டுமான பணிகள் 80 சதவிகிதம் நிறைவடைந்து உள்ளதாகவும், 2022 அக்டோபர் மாதம் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் எனவும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!