14 வயதில் எலான் மஸ்க் வாங்கச் சொன்ன பங்குகள்! - மஸ்க்கின் அம்மா சொன்ன ரகசியம்

#technology #Article #today
14 வயதில் எலான் மஸ்க் வாங்கச் சொன்ன பங்குகள்! - மஸ்க்கின் அம்மா சொன்ன ரகசியம்

உலகிலேயே முதல் பணக்காரராக விளங்கும் எலான் மஸ்க், தனது 14 வயதிலேயே அவரது தாயாருக்கு 'ஸ்டாக் மார்க்கெட்' குறித்து துல்லியமான அறிவுரையை வழங்கி லாபம் அடைய செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்த தகவலை எலான் மஸ்கின் தாயாரே சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

'ஸ்பேஸ் எக்ஸ்', 'டெஸ்லா' உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க், இன்றைய சூழலில் உலகின் முதல் செல்வந்தர் ஆவார். இவரது சொத்து மதிப்பு பல லட்சம் கோடிகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பிசியான தொழிலதிபராக இருந்தபோதிலும், சமூக வலைதளங்களிலும் எலான் படு ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

இதனால் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மத்தியில் எலான் மஸ்க் மிகவும் பிரபலமாக மாறியுள்ளார். இதனால் ட்விட்டரில் அவரிடம் தினமும் ஆயிரக்கணக்கானோர் கேள்வி கேட்பது வழக்கம். அதில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சுவாரசியமான கேள்விகளுக்கு மட்டும் பதிலளிப்பதை எலான் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், ஸ்டாக் மார்க்கெட் முதலீடுகள் குறித்து அவரிடம் பலர் கேள்வியெழுப்பி இருந்தனர். அதற்கு எலான் மஸ்க் அண்மையில் பதிலளித்தார். அதில், "பொருட்களை தயாரிக்கும், சேவைகளை வழங்கும் நம்பகமான நிறுவனங்களின் பங்குகளை வாங்குங்கள். ஒருவேளை, அந்நிறுவனத்தின் மதிப்பு குறைந்தால் மட்டும் உங்கள் பங்குகளை விற்று விடுங்கள்; ஸ்டாக் மார்க்கெட் நிலவரத்தை வைத்து முடிவெடுக்காதீர்கள். ஏனெனில் அது நீண்டகாலத்துக்கு பலனளிக்கும்" என அவர் கூறியிருந்தார்.

14 வயதில் அட்வைஸ்...

இந்நிலையில், எலானின் இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்திருக்கும் அவரது தாயார் மயே மஸ்க், பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சுவாரசியமான கதையை பகிர்ந்திருக்கிறார்.

அதில், "எலான் உனக்கு நினைவிருக்கிறதா? அப்போது நாம் தென் ஆப்பிரிக்காவில் இருந்தோம். உனக்கு சரியாக 14 வயதுதான் இருக்கும். ஒரு நாள் நீ என்னிடம் வந்து குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குமாறு கூறினாய். இதுகுறித்து எனது ஸ்டாக் மார்க்கெட் நண்பரிடம் கேட்டேன். அது தவறான யோசனை என அவர் கூறினார். அதனால் வேறு வழியின்றி 1,000 ராண்டுகளை (1,000 டாலருக்கு சமம்) அந்நிறுவனத்தில் முதலீடு செய்தேன்.

அன்றைய காலக்கட்டத்தில் நான் இழக்க துணிந்த பெரிய தொகை அவ்வளவுதான். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக அந்த முதலீடு 3,000 ராண்டுகளாக மாறியது. உடனே அந்த பங்கை விற்றுவிடுமாறு எனது நண்பர் கூறியதால் அதனை விற்றுவிட்டேன். உனக்கு அதில் விருப்பமில்லை. அதேபோல, அந்தப் பங்கின் மூலம் கிடைத்த பணத்தை உனக்கும், உனது சகோதர்களுக்கும் பிரித்து கொடுத்ததிலும் உனக்கு உடன்பாடு இல்லை" என அதில் மயே மஸ்க் கூறியுள்ளார்.

இந்த ட்வீட்டை லட்சக்கணக்கானோர் லைக் செய்திருப்படன் ரீட்வீட்டும் செய்து வருகிறார்கள். எலான் மஸ்க்குக்கு சிறு வயதிலேயே தொழில் நிறுவனங்கள் குறித்தும், ஸ்டாக் மார்க்கெட் குறித்தும் தீர்க்கமான அறிவு இருந்ததே இன்றைக்கு பெரும் தொழிலதிபராக அவர் வளர்ந்து நிற்க காரணம் என பலர் கமெண்டில் குறிப்பிட்டு வருகின்றனர்.