உலக பூமி தினத்தன்று 4 சிறப்பு டூடுல்களை வெளியிட்ட கூகுள் நிறுவனம்!

#technology #history #today
உலக பூமி தினத்தன்று 4 சிறப்பு டூடுல்களை வெளியிட்ட கூகுள் நிறுவனம்!

1970 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், பூமி மாசுபடுவதை குறைக்கும் வகையிலும் ‘பூமி தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் பூமி தினம் இந்தியாவில் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது. இதனை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் பூமியைச் சுற்றியுள்ள நான்கு வெவ்வேறு இடங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் காட்ட, சிறப்பு டூடுல்களை வெளியிட்டது.

கூகுள் எர்த் மூலம் சேகரிக்கப்பட்ட படங்களின் தொகுப்பின் மூலம் டைம்-லாப்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. பவளப்பாறைகள், பனிப்பாறைகள் மற்றும் பூமியின் பசுமை காடுகள் உட்பட பூமியின் பல பகுதிகளை, நூற்றாண்டுகள் கடந்து நம் கண்முன் காட்டியுள்ளது. ஒவ்வொரு டூடுலையும் காணும் போது, காலநிலை மாற்றத்தால் பூமி எப்படியெல்லாம் சீரழிந்துள்ளது என்ற உண்மை நம் முகத்தில் அறைகிறது.

முதல் டூடுலில் தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலையின் உச்சியில் பனிப்பாறைகள் உருகியதை காட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. டைம்-லாப்ஸைப் பயன்படுத்தி 1986ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை டிசம்பர் 12ம் தேதி அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது

2000 முதல் 2020 வரை ஒவ்வொரு டிசம்பரில் எடுக்கப்பட்ட படங்களைப் பயன்படுத்தி கிரீன்லாந்தில் உள்ள செர்மர்சூக்கில் பனிப்பாறைகள் உருகி வருவதை மற்றொரு படம் காட்டுகிறது.

மூன்றாவது கூகுள் டூடுல் சிறப்பு படத்தில், ஆஸ்திரேலியாவில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப், லிசார்ட் தீவில் பவளப்பாறைகள் அழிந்து போனதை மார்ச் முதல் மே 2016 வரையிலான கால இடைவெளியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலமாக உருவாக்கியுள்ளது.

நான்காவது மற்றும் கடைசி டூடுல், ஜெர்மனியின் எலெண்டில் உள்ள ஹார்ஸ் காடுகளைக் காட்டுகிறது, அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் கடுமையான வறட்சியின் காரணமாகவும், பட்டை வண்டுகளின் தாக்குதலாலும் காடுகள் அழிக்கப்பட்டது காண்பிக்கப்பட்டுள்ளது. 1995 முதல் 2020 வரை ஒவ்வொரு டிசம்பர் மாதமும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் டைம் லாப்ஸ் முறையில் இணைக்கப்பட்டுள்ளது