வாட்ஸ்அப் புது அப்டேட்: Chats மற்றும் Status இரண்டையும் ஒருங்கிணைக்க முடிவு?
வாட்ஸ்அப்பில் அடுத்த புதிய அம்சமாக Chats மற்றும் Status இரண்டையும் ஒரே தளத்தில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வாட்ஸ்அப்பில் நாம் அனுப்பும் மெசேஜ்கள் “Chats” என்ற பிரிவிலும், நம் நண்பர்கள் வைக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் “Status” என்ற பிரிவிலும் தனித்தனியாக காண்பிக்கப்படுகிறது. நாம் மெசேஜ் அனுப்பும் அதே நபர் தான் ஸ்டேட்டஸ்-உம் வைக்கிறார் என்பதால் எதற்காக இரண்டையும் தனித்தனியாக வைக்க வேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனம் யோசித்துள்ளது.
இதையடுத்து Chats மற்றும் Status இரண்டையும் ஒரே தளத்தில் கொண்டுவர முடிவு அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
“Chats" என்ற பிரிவிலேயே நேரடியாக ஸ்டேட்டஸ் அப்டேட்களைக் காண்பிக்கும் புது வசதியை வாட்ஸ்அப் பரிசோதிப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய வசதி பயனர்கள் அதிக மெசேஜ்கள் அனுப்புவதற்கு ஊக்கத்தை அளிக்கும் என அந்நிறுவனம் நம்புகிறது. ஏனெனில் பயனர்கள் தங்கள் தொடர்புகளின் “Status”-களை விரைவாகப் பார்க்க முடியும்.
பயனர் அவர்களின் தொடர்பின் சுயவிவரப் படத்தைத் தட்டும்போது அவர்கள் வைத்த ஸ்டேட்டஸ்கள் தோன்றும். மெட்டாவின் இன்ஸ்டாகிராமில் பயனர்கள் வைக்கும் ஸ்டேட்டஸ்கள் எப்படிப் பார்க்கிறோமோ அதே போல் வாட்ஸ் அப்பிலும் பார்க்கும் வசதி அறிமுகமாக உள்ளது.
பரிசோதனை முயற்சியில் இருக்கும் இந்த புது அப்டேட் எப்போது பயனர்களுக்கு கிடைக்கும் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. கூடுதலாக வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் குழு வாக்கெடுப்புகளை (Group Polls) உருவாக்க பயனர்களை அனுமதிக்கும் வசதியின் சோதனை முயற்சியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.