'வாட்ஸ்அப் செயலியை பேஸ்புக்கிற்கு விற்றதற்காக வருந்துகிறோம்' - நீரஜ் அரோரா

#technology #Article #today
'வாட்ஸ்அப் செயலியை பேஸ்புக்கிற்கு விற்றதற்காக வருந்துகிறோம்' - நீரஜ் அரோரா

வாட்ஸ்அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு விற்பனை செய்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார், வாட்ஸ்அப் நிறுவனத்தின் முன்னாள் தலைமை வணிக அதிகாரி நீரஜ் அரோரா.

உலக அளவில் அதிகம் பயனர்களால் பயன்படுத்தப்படும் 'வாட்ஸ்அப்' செயலியை கடந்த 2014-ம் ஆண்டில் ஃபேஸ்புக் நிறுவனம் 22 பில்லியன் டாலருக்கு  வாங்கியது. இந்த நிலையில், 2018ஆம் ஆண்டு வரை வாட்ஸ்அப் தலைமை வணிக அதிகாரியாக இருந்த நீரஜ் அரோரா, வாட்ஸ்அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு விற்றது குறித்து வருந்தி பதிவிட்டிருக்கிறார்.

விற்பனை குறித்த பேரத்தில் முக்கிய பங்கு வகித்த அரோரா, வாட்ஸ்அப் செயலி ஃபேஸ்புக்கின் ஓர் அங்கமாக மாறியதற்கு, தான் மட்டுமின்றி பலரும் வருந்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நீரஜ் அரோரா மேலும் கூறுகையில், ''2012ஆம் ஆண்டில் ஃபேஸ்புக் நிறுவனம், வாட்ஸ்அப்பை வாங்குவது தொடர்பாக எங்களை அணுகியது. முதலில் நாங்கள் மறுத்துவிட்டோம். பின்னர்தான் அதற்கு சம்மதம் தெரிவித்தோம். வாட்ஸ்அப்பை விற்பது தொடர்பான பேச்சுவார்த்தையின்போது நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக எடுத்துரைத்தோம்.

அதாவது பயனர் தரவுகளை சுரண்ட கூடாது; விளம்பரங்கள் காண்பிக்கக்கூடாது; கிராஸ் பிளாட்பார்ம் கண்காணிப்பு கூடாது என்றோம். ஃபேஸ்புக் அதற்கு ஒப்புக்கொண்டது.  ஆனால் சொன்னப்படி எதுவும் நடக்கவில்லை. 2018 இல், பேஸ்புக் / கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா ஊழலின் விவரங்கள் வெளிவந்தவுடன், வாட்ஸ்அப் நிறுவனர் பிரையன் ஆக்டன் ஃபேஸ்புக்கை டெலிட் செய்யும் நேரம் வந்துவிட்டது என பதிவிட்டார்.

இன்று மெட்டா நிறுவனத்தில் வாட்ஸ்அப் 2வது பெரிய தளமாக இருக்கிறது. முதலில் ஃபேஸ்புக் தனது தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும். ஃபேஸ்புக் ஒரு அரக்கனாக மாறும் என்று ஆரம்பத்தில் யாருக்கும் தெரியாது. இன்று வாடிக்கையாளர்களின் தகவல்களைத் திருடி அதிகளவிலான பணத்தைச் சம்பாதித்து வருகிறது. எங்களது கனவு, கொள்கை அனைத்தையும் மெட்டா சீர்குலைத்துள்ளது'' என நீரஜ் அரோரா தெரிவித்துள்ளார்.