தற்போது நிகழும் கோடையும் கண் பராமரிப்பும் பற்றிய விளக்கம்...
இந்தாண்டு மார்ச் மாதம் இலங்கையெங்கும் பதிவான வெப்ப அளவினைப் பார்க்கும் போது... வழக்கத்தைவிட இந்தாண்டு வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்றில் இந்தாண்டு மே மாதம் தான் அதிக வெப்பமான மாதமாக இருந்திருக்கிறது.
சுற்றுசூழலில் அதிக அளவு வெப்பம் நிலவும் போது நமது உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். கண்களின் கண்ணீர் படலங்கள் ஆவியாகி விடுவதால் கண்கள் எளிதாக உலர்ந்து விடும். இதனால் கண்ணில் எரிச்சல், அரிப்பு, அழற்சி, கண் சிவத்தல், வீக்கம் போன்ற பிரச்னை ஏற்படும். மேலும் கோடையின் மிகவும் முக்கியமான பிரச்னை ‘மெட்ராஸ் ஐ’. இது கண் இமைகளில் வீக்கம், வலி ஏற்படும். சில சமயம் நுண்ணுயிர் தொற்று காரணமாக கண்ணிமைக்கட்டி போன்ற பாதிப்புகளும் கோடையில் ஏற்படும்.
இருப்பினும் இது போன்ற கண்நோய்கள் தாக்காமலும் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். அதற்கு ஐந்து முக்கிய வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என்கிறார் முதுநிலை கண் மருத்துவர் மற்றும் பிராந்திய தலைவரான கண்நிபுணர் ஸ்ரீனிவாசன் ஜி ராவ்.
20-20-20 விதி கோடைக்காலத்தில் ஏ.சிக்கு நாம் சரணாகதி அடைவது போல், கணினியில் நீண்டநேரம் பணியாற்றுவதும் அவசியமாகிவிட்டது. கண் நலத்தைப் பாதிக்கக்கூடிய ஒரு ஆபத்தான கலவை தான் இவை இரண்டும். ஏ.சி இயக்கப்படும்போது அறையின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதமும் குறையும்.
மேலும் கண்கள் வறண்டு போகாமல் இருக்க கண்களில் எண்ணைப்பசை கொண்ட செய்போமியச் சுரபி திறன் குறைந்து நமது கண்கள் மிக விரைவில் உலர்ந்து விடும். கணினி, டி.வி திரையை நீண்டநேரம் தொடர்ந்து பார்ப்பது இப்பிரச்சனையை மேலும் மோசமாக்கி விடுகிறது. இதனால் நாம் கண் இமைக்கவும் மறந்துவிடுகிறோம். வழக்கமாக ஒரு நிமிடத்திற்கு சுமார் 15-20 தடவைகள் நாம் கண்களை இமைக்கிறோம்.
ஒவ்வொரு முறையும் இமைக்கும்போது கண்கள் மீது கண்ணீர் சீராகப் பரவ உதவும். இது கண்கள் உலர்ந்துவிடாமல் பாதுகாக்கும். கணினியில் பணியாற்றும்போது சராசரியாக சுமார் 7-10 தடவைகள் மட்டுமே கண்களை நாம் இமைக்கிறோம். விளைவு கண்கள் உலர்ந்து, கண் எரிச்சல் ஏற்படும். குளிர்சாதன அறையில் கணினியில் பணியாற்றுவது, உலர்ந்த கண்கள் பிரச்சனையை வரவழைக்கும்.
கோவிட் பரவலுக்குப் பிறகு கணினி திரையில் வேலை பார்க்கும் நேரம் ஒரு நாளுக்கு சுமார் 3 மணி நேரங்களிலிருந்து, 8 மணி நேரங்கள் வரை அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. விளைவு உலர்ந்த கண்கள் பாதிப்பு விகிதமானது 15% இருந்து 40 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனை தவிர்க்க முடியாது. ஆனால் இந்த பாதிப்பினை குறைக்க 28 டிகிரி செல்சியஸ் அளவில் ஏசியை இயக்கலாம்.
இதற்கு 20-20-20 விதியைப் பின்பற்றுவது அவசியம். திரையைப் பார்க்கும் ஒவ்வொரு 20 நிமிடங்கள் கால அளவிற்கும் பிறகு 20 நொடி இடைவெளி விடவேண்டும். அந்த நேரத்தில் 20 அடி தூரத்திலுள்ள பொருளை பார்க்க வேண்டும் என்பதே இந்த விதியின் பரிந்துரை. மேலும் கணினி பார்க்க பயன்படுத்தக்கூடிய கண் கண்ணாடிகளை பயன்படுத்தலாம். கணினி திரையில் இருந்து ஏற்படும் வெளிச்சம், கண்களை பாதிக்காமல் ரிலாக்ஸ் செய்ய உதவும்.
உணவும் கண்களும்
திரவம் சார்ந்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வது அவசியம். வெயில் தாக்கத்தினால் உடலில் இருந்து இழக்கப்படும் திரவச் சத்துக்களை இவை மீட்டெடுக்கும். தினமும் குறைந்த பட்சம் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் இளநீர், எலுமிச்சை / ஆரஞ்சு சாறு, கீரை, புதினா, கேரட், ஆப்பிள் மற்றும் தக்காளி சாறுக்களையும் எடுத்துக்கொள்ளலாம்.
பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் மென் / குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது. பழங்கள் மற்றும் காய்கறிகளில் மாம்பழம், புரோக்கோலி மற்றும் முட்டைக்கோஸ் எடுத்துக் கொள்ளலாம். அழற்சியை விளைவிக்கின்ற மூலக்கூறுகளை அழிக்கவும், திரவங்களை அதிகரிக்கக்கூடிய வைட்டமின்களை சுரக்க இந்த உணவுகள் உதவுகின்றன. எண்ணெய் அதிகமாக உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.
சுத்தம் சுகாதாரம்
உடலை சத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். ெவளியே சென்றுவிட்டு வந்தபிறகு உடனடியாக கைக்கால் மற்றும் முகங்களை கழுவவேண்டும், கண்களை நன்கு அலசவேண்டும். முடிந்தால் காலை மற்றும் மாலை குளிப்பது நல்லது. இதை நாம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
ஒருவர் பயன்படுத்தும் டவல், கைக்குட்டைகள், கண் கண்ணாடிகளை தவிர்ப்பதும் முக்கியம். கண்ணில் அரிப்பு ஏற்பட்டால் அழுத்தி தேய்க்க கூடாது. இது தொற்றுப் பாதிப்பை மேலும் தீவிரமாக்கும்.
பாதுகாப்பு கவசங்கள்
சூரிய ஒளியை நேரடியாகப் பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள். கண்ணின் பின்பகுதியில் உள்ள விழித்திரையின் ஒரு அங்கமான விழித்திரைப்பொட்டுவை (மக்குலா) இது பாதிக்கும். வெயிலில் வெளியே செல்லும்போது தொப்பி, கண் கண்ணாடியை அணியலாம். புறஊதாக்கதிர்கள் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அதன் பாதுகாப்பு கொண்ட குளிர் கண்ணாடிகளை அணியலாம்.
குளிர்கண்ணாடிகளை அணியும் போது கண் மருத்துவ நிபுணரிடம் பரிந்துரையைப் பெறுவது நல்லது. நீச்சல்குளத்தில் குளிக்கும்போது நீரிலுள்ள குளோரினால் கண்கள் பாதிக்கப்படும் என்பதால் அதற்கான பாதுகாப்பு கண்ணாடிகளை அணியலாம். உலர்ந்த கண்களுக்காக மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் ‘டியர்ஸ்’ - ஐ டிராப்சினை கண் மருத்துவ நிபுணர்களிடம் கலந்தாலோசித்து பயன்படுத்த வேண்டும்.
வாழ்க்கை முறை மாற்றம்
சன் ஸ்ட்ரோக் என அழைக்கப்படும் வெப்பத் தாக்குதல் வழக்கமாக காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நடக்கிறது. அந்த நேரம் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தலைசுற்றல் ஏற்பட்டால், உடனே நிழலில் அரை மணி நேரம் அமர்ந்து பிறகு செல்லலாம். அப்போது அதே உணர்வு இருந்தால் தண்ணீர் அல்லது பழரசம் அருந்தவும். சூரிய ஒளி பாதிப்பினை ஏற்படுத்தினால் அதில் இருந்து வெளியாகும் விட்டமின் டி நம் உடலுக்கு நன்மை தருகிறது.
வெயில் காலத்தில் காலை ஏழு மணிக்குள் மற்றும் மாலை நான்கு மணிக்கு மேல் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் முடிந்த அளவிற்கு சூரியவெளிச்சத்திற்கு நேரடியாக செல்வதை தவிர்க்க வேண்டும். உலர்ந்த கண்கள், சிவந்த கண்கள், கண் அழற்சி மற்றும் கண்ணிமைக் கட்டிகள் போன்றவை தற்காலிகமானது.
பருவகாலத்தில் ஏற்படும் கண் பாதிப்புகள். இவை நீண்ட காலம் நீடித்தால் விழித்திரையையும், கருவிழியையும் பாதிக்கும். உடனே கண் மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையினை மேற்கொள்வது அவசியம் என்று ஆலோசனை அளித்தார் கண் நிபுணர் ஸ்ரீனிவாசன் ஜி ராவ்.