இந்தியாவில் உச்சம் தொட்டுள்ள பணவீக்கம்: கடன்களுக்கான வட்டிவிகிதம் மேலும் உயர வாய்ப்பு
பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ள நிலையில், கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மேலும் உயர்த்தும் என நிதிச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
உக்ரைனில் நடைபெற்று வரும் போர் காரணமாக உணவு மற்றும் எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நாட்டில் சில்லறை பணவீக்கம் அரசின் கணிப்பைத் தாண்டி, 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக 7.8 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதனால் விலையை கட்டுப்பாட்டில் வைக்க எதிர்வரும் மாதங்களில் வட்டி விகிதங்களை அதிகரிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை உயர்வு எதிரொலியாக அண்மையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை பூஜ்யம் புள்ளி 4 சதவிகிதம் அதிகரித்திருந்தது. இருப்பினும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் முதல் வட்டி விகிதங்களை மேலும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக எரிபொருள் விலைகளின் உயர்வு 10.8 சதவிகிதமாக இருக்கிறது. நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் பெரும்பகுதி இறக்குமதிகளை நம்பியே இருப்பதால் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது சவாலாகவே இருந்து வருகிறது.
இந்தோனேசியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்திருப்பது பணவீக்கத்தை சமாளிப்பதில் பெரும் சவாலாக இருந்து வருகிறது.