டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் - மோடி
டெல்லியில் வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் துயரமடைந்துள்ளேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஏற்பட்ட சோகமான தீ விபத்தில் உயிர் இழப்புகள் மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்த சோகமான சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தீயணைப்பு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். எங்களது துணிச்சலான தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தவும், உயிர்களைக் காப்பாற்றவும் தங்களால் இயன்றவரை முயற்சி செய்து வருகின்றனர். கடவுள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், டெல்லியின் தீ விபத்து மிகவும் கொடூரமானது. இந்த சோக நிகழ்வில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் முன்னாள் ராகுல் காந்தி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் டெல்லி தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் இது போன்ற விபத்துக்கள் தொடர்ந்து நடப்பதாகவும் ஆனால் கெஜ்ரிவால் அரசு எந்த மாற்றத்தை செய்யவில்லை என பாஜக எம்எல்ஏ மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். கெஜ்ரிவால் அரசு ஆட்சியில் டெல்லி மக்களின் கதி என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.