வெளிநாட்டில் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் நடத்த இந்தியா விருப்பம்
வெளிநாட்டில் புதிய இந்திய தொழில்நுட்பக் கழகங்களைத் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், அதை நடத்த விருப்பம் தெரிவித்த முதல் நாடு ஜமைக்கா என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
ஜமைக்கா நாட்டிற்கு சென்றிருந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜமைக்கா நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள், புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடி) மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (ஐஐஎம்) ஆகியவற்றில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் உலகின் மிகப்பெரிய வணிகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தலைமை தாங்குகிறார்கள்.
2020-ம் ஆண்டு வெளியிடப்பட்ட எங்கள் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் வெளிநாடுகளில் புதிய இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களைத் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்திய தொழில்நுட்பக்கழகத்தை இங்கு நடத்த ஆர்வத்தை வெளிப்படுத்தும் முதல் நாடுகளில் ஜமைக்காவும் ஒன்று என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஜமைக்கா மாணவர்கள் உலகளவில் மதிக்கப்படும் சில சிறந்த நிறுவனங்களில் படிக்கும் இந்த வாய்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேற்கத்திய நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது செலவில் ஒரு பகுதியை மட்டுமே வசூலிக்க வேண்டும்.
இன்று அதிநவீன தொழில்நுட்பங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியாவும் இந்தியர்களும் முன்னணியில் உள்ளனர். இந்தியா புதிய நிறுவனங்கள் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களின் மையமாகவும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.