நம் அனைவருக்குமே ஆரோக்கியமாகவும் அதே சமயம் நீண்ட ஆயுள் வளர்க்கும் ப்ளூபெர்ரி
நம் அனைவருக்குமே ஆரோக்கியமாகவும் அதே சமயம் நீண்ட நாள் வாழவேண்டும் என்ற விருப்பம் இருக்கும். நமக்காகவே வரப்பிரசாதமாக கிடைக்கப்பெற்றது தான் ப்ளூபெர்ரி பழம் என்கின்றனர் வல்லுநர்கள். கருப்பு திராட்சையை போன்று கொத்து கொத்தாகக் காய்க்கும் ப்ளூபெர்ரி அடர்ந்த கருநீல நிறத்தில் இருக்கும். இது வட அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டவை. இந்த பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை அப்படியே பழமாகவும் சாப்பிடலாம். அல்லது ஜூஸாகவும் எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பழத்தை நீரிழிவு நோயாளிகள் தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
ப்ளூபெர்ரி பழம் எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை நோயிலிருந்து நம்மைபாதுகாக்கிறது. தமிழில் அவுரிநெல்லி என்று அழைக்கப்படும் இதில் ஆன்டி-ஆக்சிடன்டுகள் நிறைந்திருப்பதால், மூளையின் செயல்பாட்டை தூண்டுவதில் திறன் வாய்ந்தது.
வயதான காலத்தில் சிலருக்கு ஞாபக மறதி அதிகமாக இருக்கும். சிலருக்கு இளமையிலேயே ஞாபக மறதி இருக்கும். இதனை போக்க தினமும் ப்ளூபெர்ரி பழத்தை எடுத்துக் கொண்டால் அது மூளையில் உள்ள செல்களை ஆரோக்கியமாக வைத்து ஞாபகமறதி நோய் வராமல் எதிர்க்கிறது. பெர்ரிகளுக்கு நீல நிறத்தை அளிப்பது அந்தோசயினின் எனப்படும் தாவர கலவை. பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம், ஜிங்க், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பழம் எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ப்ளூபெர்ரியில் உள்ள பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உயர் ரத்த அழுத்த அளவினை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள பைட்டோநியூட்ரியன்ட்கள் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுவதால், புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. ஆக்ஸிஜனேற்றிகள் வயிறு, புரோஸ்டேட், மார்பக மற்றும் குடல் புற்றுநோய்களைத் தடுக்க உதவும்.
இதிலுள்ள பொட்டாசியம், ஃபோலேட், வைட்டமின் சி, வைட்டமின் பி 6 மற்றும் பைட்டோநியூட்ரியன்கள் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தை நீக்கவும் உதவுகிறது. ப்ளூபெர்ரியில் உள்ள முதன்மை ஆக்ஸிஜனேற்றியான அந்தோசயனின்கள் இளம் மற்றும் நடுத்தர வயது பெண்களின் மாரடைப்பு அபாயத்தை 32% குறைக்கக்கூடும் என்று ஆய்வு கூறுகிறது.
ஒவ்வொரு நாளும் 12 வாரங்களுக்கு ப்ளூபெர்ரி சாறு குடிப்பது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, மனச்சோர்வை நீக்கி, சருமத்தினை மேம்படுத்தி, கண்புரை, குளுக்கோமா போன்ற அபாயத்தை குறைக்கிறது. ப்ளூபெர்ரியில் வயது முதிர்ச்சியை தடுக்கும் சில பண்புகள் உள்ளன. அவை உங்கள் சருமத்தை தளர்வடையாமல் வைத்திருக்கும்.
ப்ளூபெர்ரியுடன் மூன்று தேக்கரண்டி தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஒரு கட்டியான பேஸ்ட் போல செய்து கொள்ளவேண்டும். இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசி அதை நன்றாக மசாஜ் செய்து 20 நிமிடங்கள் அப்படியே உலர விடவும். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை நன்றாக கழுவிக் கொள்ளவும். தயிர் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். ப்ளூ பெர்ரி ரத்த ஓட்டத்தை சீராக்கி உங்கள் சருமத்தை இளமையான தோற்றத்தோடு வைத்திருக்கும்.
ப்ளூபெர்ரி, சில துளி எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தேன் கலந்து ஒரு பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்த்து 15 நிமிடங்கள் உலர விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் பளபளப்பை காணலாம். எண்ணெய் பாங்கான சருமம் உடையவர்கள் இதை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம்.
ப்ளூபெர்ரி பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்…
ஒரு கப் ப்ளூபெர்ரி பழத்தில் வைட்டமின் ஈ மற்றும் சி சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். இப்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சத்து, நச்சுக் கிருமிகளை அழித்து உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ரத்தத்தில் கலந்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. சிறுநீர்ப்பை அழற்சி பெரும்பாலும் ஆண்களைவிட பெண்களைத்தான் அதிகமாக தாக்குகிறது. உணவு செரிமான அடிகுழாயில் ஈ கோலி எனும் நுண்ணுயிரியை அழித்து பெண்களின் சிறுநீர்ப்பையில் பாக்டீரியா பரவாமல் தடுக்கிறது.