இலங்கை மக்கள் துயர்நீக்க 10,000 இந்திய ரூபாவை வழங்கி உதவிய தமிழ்நாட்டு யாசகர்
கையேந்தி யாசகம் பெற்று இலங்கை மக்கள் துயர்நீக்க மாவட்டஆட்சியர் சு.சிவராசு 10,000 ரூபா நிதியை யாசகர் பூல்பாண்டி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டி. மனைவி இறந்துவிட்டநிலையில் தனது குடும்பத்தினரைவிட்டு பிரிந்து ஆங்காங்கே யாசகம்பெற்று ஜீவனம் செய்துவரும் இவர், தனது தேவைக்கான பணம்போக எஞ்சிய பணத்தை கல்வி மற்றும் ஏனைய மக்கள் பணிகளுக்காக தானமாக வழங்கி வருகிறார்.அந்தவகையில் கொரோனா காலத்தில் மக்கள்படும் துன்பத்தையறிந்து யாசகம்பெற்று அவர்களின் துயர்நீக்க பணம் உதவிபுரிந்ததுடன், பல்வேறு மாவட்டங்களில் பாடசாலைகளின் சீரமைப்புக்காகவும், மாணவர்களின் கல்விக்காகவும் யாசகம் பெற்று உதவிபுரிந்தார்.
இந்நிலையில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியினை சீர்செய்ய இந்தியா மற்றும் தமிழகத்தின் சார்பில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில், பொதுமக்களும் இலங்கைத் தமிழர் துயர்நீக்க உதவிபுரிய முதல்வர் கோரிக்கை விடுத்ததையடுத்து யாசகர் பூல்பாண்டியன் பொதுமக்களிடமிருந்து கையேந்தி தான் யாசகம்பெற்ற தொகையான 10,000 ரூபாவை திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசிடம் வழங்கினார்.
சேர்த்து வைக்கும் பழக்கமில்லையென்று கூறும் இவர், இதுவரையிலும் கொரோனா காலத்தில் 5 இலட்சத்து 20,000 ரூபா வரை உதவி செய்ததாகவும், முதல்வரிடம் இந்ததொகையினை வழங்க முயன்று அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டதாகவும், அதிகாரிகளும் தன்னுடைய யாசக பணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்து அலையவிட்டதாகவும் அதன்பின்னரே திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இப்பணத்தை வழங்கியுள்ளதாக யாசகர் பூல்பாண்டியன் தெரிவித்தார்