கோடைக்கேற்ற பழங்கள் பலாவும் கிர்ணியும் சாப்பிட்டு நலம் பெறுங்கள்...
ஒரு பக்கம் வெயில் கொளுத்துதே என்று மனம் அயர்ச்சி அடைந்தாலும், வெயில் காலத்தை இனிதாக்கும் வகையில் சில வரப்பிரசாதங்களும் இந்த பருவத்தில் அதிகம் கிடைக்கிறது. அவற்றில் கனி வகைகளான பலாவும், கிர்ணியும் முக்கியமானவை.
பலா... பலா... பலா...
கோடைக்காலத்தில் உடல் அதிகமாக பலவீனமடையும். ஈடுகட்ட இயற்கை கொடுத்த கொடைதான் பலாப்பழம். பலாப்பழம் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும் என்பது தவறான நம்பிக்கை. இது உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடிய பழம். உடல் மெலிந்தவர்களைத் தேற்றும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்தப் பித்த நோய் எனப்படும் ரத்தப்போக்கு தொடர்பான நோய்களைத் தடுக்க உதவும். மலச்சிக்கல்பிரச்னைக்கும் தீர்வு தரும்.
செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், உடல் பருமனானவர்கள் பலாப்பழத்தை அதிகமாக சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோயாளிகளும் தவிர்ப்பது நல்லது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, பலாப்பழம் மரத்திலேயே பழுக்க வேண்டும். பறித்து, பழுக்க வைக்கப்படும் பலாப்பழம் மலச்சிக்கலை ஏற்படுத்தும். பசியின்மை, வயிற்று உப்புசம் போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.
கோடைக்கேற்ற கிர்ணி
பொதுவாக கோடைக்காலத்தில் நாம் இழந்த சத்துக்களை மீட்டு எடுக்க அறுசுவைகளில் மிகச் சிறந்தது இனிப்புச் சுவைதான். ஏனெனில் இனிப்புச் சுவையில்தான் அதிகளவு நீர்ச் சத்து இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. எனவே, கோடைக்காலத்தில் கிர்ணி உண்பது மிகச் சிறந்தது. இப்பழம் கோடைக்காலத்தில்தான் அதிகளவில் கிடைக்கிறது என்பது ஆச்சர்யமான தகவல்.
முலாம்பழம் என்றும் அழைக்கப்படும் இக்கனி, உடலுக்கு ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பாற்றலை தருகிறது. நீரிழிவு நோயாளிக்கும் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் உகந்தது. இதனுடைய விதையை உலர்த்தி நுரையீரல் தொந்தரவுகளுக்கும் இருமல் நோய்களுக்கும் மருத்துவரின் அறிவுரையின்படி எடுத்துக் கொள்ளலாம்.