சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவை வலுப்படுத்த திட்டம் - பிரதமர் மோடி
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று நடைபெற்ற மாநில முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டு தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
ஒரு நாடு- ஒரே வரி, ஒரு நாடு-ஒரே மின்கட்டமைப்பு, ஒரு நாடு- ஒரே மொபிலிட்டி கார்டு, ஒரு நாடு-ஒரே ரேஷன் கார்டு ஆகிய முயற்சிகள் அனைத்தும் எங்களின் திடமான மற்றும் தெளிவான கொள்கைகளின் பிரதிபலிப்பு.
சமீபத்தில் நாங்கள் 8 வருட ஆட்சியை நிறைவு செய்துள்ளோம். சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவை ஒரு தேசமாக வலுப்படுத்த நாங்கள் உழைத்து வருகிறோம்.
இந்த ஆண்டுகளில், சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் என்ற மந்திரத்தில் நாங்கள் நாட்டை முன்னேற்றி உள்ளோம். கொள்கை ஸ்திரத்தன்மை, ஒருங்கிணைப்பு மற்றும் எளிதான வணிகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம்.
இன்று உலகம் இந்தியாவின் செயல்திறனைப் பாராட்டுகிறது. ஜி20 நாடுகளின் பொருளாதாரத்தில் நாம் வேகமாக வளர்ந்து வருகிறோம். உலக சில்லறை வர்த்தக குறியீட்டில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
21ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு உத்திரப் பிரதேசம்தான் உத்வேகத்தைக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன். அடுத்த 10 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம் இந்தியாவுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும்.
இன்று 80,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சாதனை முதலீடு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். உத்தர பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் இதனால் அதிக பயன் பெறுவார்கள்
நிகழ்ச்சியில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.