வியட்நாம் நாட்டிற்கு அதிவிரைவு பாதுகாப்புப் படகுகளை வழங்கிய இந்தியா

#India
Prasu
2 years ago
வியட்நாம் நாட்டிற்கு அதிவிரைவு பாதுகாப்புப் படகுகளை வழங்கிய இந்தியா

மத்திய அரசு , வியட்நாம் நாட்டிற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை வழங்கும் திட்டத்தின் கீழ் அதிவிரைவு பாதுகாப்பு படகுகளை வழங்குகிறது. இதற்காக முதல் ஐந்து படகுகள் இந்தியாவின் லார்சன் & டியூப்ரோ கப்பல் கட்டும் தளத்திலும், இதர 7 படகுகள் வியட்நாமின் ஹோங் ஹா கப்பல் கட்டும் தளத்திலும் உருவாக்கப்பட்டன. 

வியட்நாம் சென்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஹாய் ஃபாங்கில் உள்ள ஹோங் ஹா கப்பல் கட்டும் தளத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது இந்தியா சார்பில் வியட்நாமிற்கு 12 அதிவிரைவு பாதுகாப்புப் படகுகளை அவர் வழங்கினார். 

நிகழ்ச்சியில் பேசிய மந்திரி ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான இந்தியாவில் தயாரித்தல், உலகிற்காக தயாரித்தல் என்ற திட்டத்தின் கீழ் இந்த படகுகள் தயாரிப்பு திட்டம் சிறந்த உதாரணம் என்று குறிப்பிட்டார். 

கொரோனா கால சவால்களுக்கு மத்தியிலும் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியிருப்பது, இந்திய பாதுகாப்பு உற்பத்தித் துறையின் தொழில்நுட்ப வல்லமை மற்றும் உறுதிப்பாட்டிற்கு சான்றாக அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். 

எதிர்காலத்தில் இந்தியா மற்றும் வியட்நாம் இடையே ஒத்துழைப்புடன் கூடிய ராணுவத் திட்டங்களுக்கான முன்னோடியாக இத்திட்டம் செயல்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் தற்சார்பு இந்தியா திட்டம் மூலம் இந்திய பாதுகாப்புத் துறை தனது திறன்களை கணிசமாக உயர்த்தியிருப்பதாக அவர் தெரிவித்தார். 

உள்நாட்டுத் தேவைகளோடு, சர்வதேச தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பாதுகாப்பு உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதற்கு ஓர் உள்நாட்டு தொழில்துறையை அமைப்பதே இதன் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.