இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுக கடல் பகுதி உள் வாங்கியதால் பரபரப்பு

Kanimoli
2 years ago
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுக கடல் பகுதி  உள் வாங்கியதால் பரபரப்பு

  இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுக கடல் பகுதி இன்று காலை வழக்கத்தை விட உள் வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டி உள்ளதோடு, அடிக்கடி கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசால் அறிவித்துள்ள மீன்பிடி தடை காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில் இராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று மாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இதன்போது மீன் பிடிக்க சென்ற ஒரு சில மீன்பிடி விசைப் படகுகள் மீன் பிடித்து விட்டு இன்று புதன்கிழமை (15) காலை மீன் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு எடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடல் உள்வாங்கியதால் தரை தட்டி படகு சேதமடையும் என்ற அச்சத்தில் படகை மீனவர்கள் துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

தமிழக அரசு பழமையான ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தை உடனடியாக தூர்வாரி பேரிடர் காலங்களில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு வழி வகை செய்து தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கடந்த சில வாரங்களாக அங்கு தொடர்ந்து கடல் உள்வாங்கி வந்த நிலையில் கடந்த வாரம் கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

இவ்வாறான நிலையில் தற்போது இன்று காலை முதல் தொடர்ந்து கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன