ஐஸ் கட்டிகள் பயன்படுத்துவது நல்லதா? அல்லது கூடாதா?...
குளிர்பானங்களோடு சேர்த்து அருந்துவதற்காகத் தயாராகிற ஐஸ்கட்டிகள் சுகாதாரமானதாக, சுத்தமான நீரினால் செய்யப்பட வேண்டும். ஆனால், இப்படி சுத்தமான ஐஸ்கட்டி எல்லா இடங்களிலும் கிடைப்பது சாத்தியமில்லை. ஆனால், பெரும்பான்மையான மக்கள் இவ்வாறான ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கும்போது கடைகளில் தருகிற ஐஸ்கட்டிகளையே பயன்படுத்துகிறார்கள்.
அசுத்தமான நீரினை பயன்படுத்தும்போது ஏற்படும் காலரா, டைபாய்டு, போலியோ, கல்லீரல் பாதிப்பு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் சுகாதாரக் குறைவான ஐஸ்கட்டிகளை நேரடியாக பானங்களில் கலந்தும் உட்கொள்ளும்போதும் வர வாய்ப்பிருக்கிறது. முக்கியமாக உடலில் ஏற்படும் நோய்களில் 75 சதவீதம் குடிதண்ணீராலும் அசுத்தமான ஐஸ் கட்டிகளாலும்தான் வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
24 மணி நேரத்திற்கு மேல் தண்ணீரை வைத்திருந்தால் நோய்களை உண்டு பண்ணக்கூடிய பாக்டீரியா ஐஸ்கட்டியில் எளிதில் வளரும். அதுபோல இந்த ஐஸ் கட்டிகள் ஒரு நாளுக்கு மேல் பாதுகாத்து வைத்து நமக்கு தரப்படும்போது மேலே குறிப்பிட்ட நோய்கள் நம்மை தாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால் குளிர்பானங்களிலும், பழச்சாறுகளிலும் ஐஸ்கட்டிகளை போட்டு அருந்துவதை தவிர்த்துவிட்டு நேரடியாக அருந்துவது நல்லது. அப்போதுதான் பழச்சாறின் முழு பயனும் நமக்குக் கிடைக்கும்.
முக்கியமாக, ஐஸ்கட்டிகள் பெரும்பாலும் நாம் நேரடியாக உண்பதற்காக தயாரிக்கப்படுவதில்லை. மாறாக, அது இன்னொரு உணவை பாதுகாக்க, பதப்படுத்த பயன்படுத்தப்படுகிற பொருள். ஆனால், இன்றைக்கு பழச்சாறு நிலையங்களில் அவைகளை நேரடியாக உடைத்து நாம் அருந்தும் பானத்தில் போட்டு தருகிறார்கள். இது தவறு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.