துணை அதிபர் கமலா ஹாரிஸிடம் பிரியங்கா சோப்ரா கூறிய இரகசியம்
நாம் இருவரும் இந்தியாவின் மகள்கள் தான் என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுடனான நேர்காணலில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், ஜனநாயக கட்சியை சேர்ந்த மகளிர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நேர்காணல் செய்தார்.
அந்த நேர்காணலில் பெண்களுக்கான சம்பளத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு, எல்லை பிரச்னைகள், துப்பாக்கி கட்டுப்பாடு, பருவநிலை மாற்றம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரியங்கா கேள்விகளை முன்வைக்க கமலா தனக்கே உரிய பாணியில் பதிலளித்துள்ளார்.
இந்தியாவுடான தொடர்பு குறித்த கேள்வியுடன் துவங்கிய பிரியங்கா, ஜனநாயகத்தில் பெண்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதில் இந்தியா முன்னணியில் இருப்பதையும், அமெரிக்கா நீண்ட காலமாக காத்திருக்கிறது என குறிப்பிட்டார்.
இதன்போது பிரியங்கா சோப்ரா பேசுகையில்,
”ஒரு வகையில் நாம் இருவரும் இந்தியாவின் மகள்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் ஒரு இந்திய தாய் மற்றும் ஜமைக்கா தந்தைக்கு அமெரிக்காவில் பிறந்த பெருமைக்குரிய மகள். நான் இரண்டு மருத்துவ பெற்றோருக்குப் பிறந்தவள் மற்றும் இந்த நாட்டில் சமீபத்தில் குடியேறியவள். அமெரிக்கக் கனவை இன்னும் முழு மனதுடன் நம்புகிறவள்.
எனது தாய்நாடான இந்தியாவில், 1966ம் ஆண்டிலேயே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திரா முதல் தற்போதைய ஜனாதிபதி திரவுபதி முர்மு வரை பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரப் பதவிகளை வகித்துள்ளனர். வாய்ப்பும் புரட்சியும் நிறைந்த இந்த நாட்டில், அந்த இறுதி உச்சவரம்பு இன்னும் உடைந்ததை காணவில்லை என்பது திகைப்பாக இருக்கிறது.' என்றார்.
அதேவேளை சோப்ராவின் கேள்வியை ஆமோதித்த ஹாரிஸ், 'ஜனநாயகத்தின் பலம் என்பது அந்த ஜனநாயகத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் அந்தஸ்தில் உள்ளது' என்றார்.
'ஆரம்ப காலம் முதலே உலகம், பெண்களின் சக்தியை குறைவாக மதிப்பிட்டு வருகிறது. நாம் புறக்கணிக்கப்பட்டு மௌனமாக்கப்பட்டுள்ளோம். ஆனால் பல தன்னலமற்ற பெண்களின் விடாமுயற்சிக்கு நன்றி.
இன்று நாம் ஒன்றிணைந்து தவறுகளைச் சரிசெய்வதற்கு ஒன்றாக செயல்படக்கூடிய இடத்தில் இருக்கிறோம். நேற்றிரவு வாஷிங்டனில் நடந்த மாநாட்டில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருடன் நடத்திய உரையாடலில் இது ஒரு முக்கிய அம்சமாக இருந்தது' என பதிவிட்டுள்ளார்.