குஜராத் தொங்கு பால விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132ஆக உயர்வு!
குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132ஆக உயர்வடைந்துள்ளது. இந்த பாலம் அறுந்து விழுந்ததால் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதியளவு நீரில் மூழ்கிய தொங்கு பாலத்தில் மக்கள் தொங்கிக்கொண்டிருப்பது போன்ற காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன. சம்பவத்தின் போது 500-க்கும் மேற்பட்டோர் பாலத்தில் நின்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தேசிய பேரிடர் மீட்புக் குழு, இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை வீரர்கள் களம் இறக்கப்பட்டு, இரவு முழுவதும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
விபத்து நடைபெற்ற பகுதியில் ஆய்வு செய்த அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நூறை தாண்டி விட்டதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த பாலத்தை நிர்வகித்து வந்த தனியார் நிர்வாக குழுவுக்கு எதிராக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் குஜராத் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.