லண்டனில் வசித்து வரும் தன்னுடைய மகள் ஹரித்ராவுடன் வாழ விரும்புவதாக நளினி தகவல்
லண்டனில் வசித்து வரும் தன்னுடைய மகள் ஹரித்ராவுடன் வாழ விரும்புவதாக நளினி தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயர்ஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய ஏழு பேரும் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வந்தனர். பேரறிவாளன் கடந்த மே மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஏனைய ஆறு பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து ஆறு பேரும் இன்றைய தினம் சிறையில் இருந்து விடுதலையாவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீர்ப்பு கிடைத்த பின்னர் ஊடகமொன்றுக்கு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவர் மேலும் கூறுகையில், பேரறிவாளனின் விடுதலைக்கு பிறகு 6 பேரும் விடுதலையாவோம் என நம்பிக்கை இருந்தது. தற்போது நாம் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
32 ஆண்டுகளாக மறக்காமல் இருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி. 32 ஆண்டுகளாக சிறையில் இருந்தோம். இனிமேல் என்ன சந்தோஷம்? 6 பேரும் அவரவர் குடும்பத்துடன் சேரவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
என் மகள் ஹரித்ராவுடன் வாழ விரும்புகிறேன், என் மகள் சொல்வதை வைத்து இனி என்ன செய்ய வேண்டும் என்று நடவடிக்கைகளை எடுப்பேன் என கூறியுள்ளார்.
மேலும் நளினியின் மகள் ஹரித்ரா தற்போது லண்டனில் மருத்துவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.