நாயகியாக வென்றாரா சமந்தா? யசோதா - திரை விமர்சனம்

Nila
1 year ago
நாயகியாக வென்றாரா சமந்தா? யசோதா - திரை விமர்சனம்

 அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் சமந்தா தற்போது கதையின் நாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் தான் யசோதா. நேற்று வெளிவந்த இந்த திரைப்படம் வாடகைத்தாய் பற்றிய விஷயங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. சமந்தா அதிக ரிஸ்க் எடுத்து நடித்திருக்கும் இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்ற விரிவான விமர்சனத்தை இங்கு காண்போம்.

கதைப்படி ஹாலிவுட் நடிகை ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அதை கண்டுபிடிக்க வரும் போலீசாருக்கு அடுத்தடுத்து நிகழும் கொலைகள் கடும் அதிர்ச்சியை கொடுக்கிறது. இது ஒரு புறம் இருக்க தன்னுடைய குடும்ப சூழல் மற்றும் வறுமையின் காரணமாக யசோதாவாக வரும் சமந்தா வாடகை தாயாக மாறுகிறார். வாடகை தாய்களை பாதுகாப்பதற்கேன்றே இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் சமந்தாவும் பராமரிக்கப்படுகிறார்.
 
ஆனால் அந்த மருத்துவமனைக்குள் ஏதோ தவறாக நடக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் சமந்தா அங்கு இருக்கும் தடை செய்யப்பட்ட ஒரு இடத்திற்குள் செல்கிறார். அங்கு வாடகை தாய்க்கு நடக்கும் அநீதிகளை அவர் கண்டுபிடித்து குற்றவாளிகளுக்கு எதிராக திரும்புகிறார். அந்த முயற்சியில் சமந்தா வெற்றி பெற்றாரா, காவல்துறைக்கு தண்ணி காட்டும் அந்த அடுத்தடுத்த கொலைகளுக்கான காரணம் என்ன என்பதற்கான விடை தான் இந்த யசோதா.
 
சமந்தா ஒவ்வொரு காட்சியிலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி மொத்த படத்தையும் தாங்கி பிடித்திருக்கிறார். சண்டை காட்சியிலிருந்து அனைத்து காட்சிகளிலும் ஹீரோ இல்லாத குறையை இவர் ஒருவரே போக்கி விடுகிறார். இவருக்கு அடுத்தபடியாக வில்லியாக கலக்கி இருக்கும் வரலட்சுமி தன் கேரக்டரை கனக்கச்சிதமாக செய்திருக்கிறார்.
 
இப்படி பல காட்சிகள் படத்திற்கு பக்க பலமாக இருந்தாலும் ஏகப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகள் வருவது கதையின் விறுவிறுப்பை நிறையவே குறைக்கிறது. அதிலும் பிளாஷ்பேக் காட்சிக்குள் இன்னொரு பிளாஷ்பேக் என்று காட்டுவது ஆடியன்ஸை மொத்தமாக குழப்பம் அடைய வைத்திருக்கிறது. மேலும் மணி ஷர்மாவின் இசையில் பாடல்களும் பெரிய அளவில் மனதில் நிற்கவில்லை.
 
சில கதாபாத்திரங்கள் மட்டுமே பொருத்தமாக இருப்பதும் பல கேரக்டர்கள் மனதில் ஒட்டாமல் போவதும் நெருடலை கொடுக்கிறது. அந்த வகையில் கதையை நேர்த்தியாக கொண்டு சென்ற இரட்டை இயக்குனர்கள் பல இடங்களில் சறுக்களை சந்தித்து இருக்கின்றனர். ஆக மொத்தம் அழுத்தமான கேரக்டரில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ள சமந்தாவுக்காக இந்த யசோதாவை ஒரு முறை பார்க்கலாம்.