முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை

Prasu
1 year ago
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேர் வேலுார் உள்ளிட்ட பல்வேறு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 

இதில் பேரறிவாளன் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். நேற்று ஏனைய ஆறு பேரும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையிலிருந்து முருகன், சாந்தன் ஆகியோர் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால், திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

தற்போது பரோலில் வந்துள்ள நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறார். இவருக்கு இதுவரை 10 முறை பரோல் நீடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது பரோல் ரத்து செய்யப்பட்டு வேலுார் பெண்கள் சிறைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

அங்கு வழக்கமான நடைமுறைகளுக்கு பிறகு அவரும் விடுதலை செய்யப்பட்டார். அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால், காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றார்.

அங்கு அவர் நான் என் குடும்பம், குழந்தை, கணவர் என குடும்ப தலைவியாக வாழப்போவதாக நிருபர்களிடம் கூறினார். 

சாந்தன் பாஸ்போர்ட் காலாவதியாகி விட்டது. தமிழக அரசு அதை புதுப்பித்து தந்தால் அவர் இலங்கை சென்று விடுவார் என்று சாந்தன் வக்கீல் ராஜகுரு குறிப்பிட்டார்.விடுதலையான மூவரும் 31 ஆண்டுகள் சிறையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜிவ் கொலை வழக்கிலிருந்து மட்டும் தான் முருகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 2020ம் ஆண்டு வேலுார் சிறையில் பெண் காவலரை ஆபாசமாக பேசிய வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு தனியாக நடக்கும் என்று பாகாயம் போலீசார் தெரிவித்தனர்.