இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முக்கியமானது - ஜி20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி
ஜி-20 அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலித்தீவில் உள்ள ஜலன் நுசாதுவாவில் இன்று தொடங்கியது. மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளனர்.
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 19 நாடுகளையும் ஐரோப்பிய கூட்டமைப்பையும் உள்ளடக்கிய அமைப்பாக ஜி-20 உள்ளது.
இதற்கிடையே, ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நேற்று தனி விமானம் மூலம் இந்தோனேசியா சென்றடைந்தார்.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தோனேசியாவில் வசிக்கும் இந்தியர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
அவர்களுடன் மோடி சிறிது நேரம் உரையாடினார். இந்நிலையில், இன்று காலை ஜி-20 மாநாடு நடைபெறும் பாலி நகரில் உள்ள அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலுக்கு உலக தலைவர்கள் வந்தனர்.
அவர்களை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வரவேற்றார். காலை தொடங்கிய மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அவரை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வரவேற்றார். பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்.
இருவரும் கை குலுக்கியபடி சிரித்துக் கொண்டு பேசினார். மேலும் மோடியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆகியோர் வரவேற்றனர்.
அதன்பின் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று உலகம் ஜி-20 அமைப்பிடம் இருந்து அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது.
சவாலான உலகளாவிய சூழலில் ஜி-20 மாநாட்டுக்கு தலைமை தாங்கிய இந்தோனேசியாவுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் என அனைத்தும் சேர்ந்து உலகில் அழிவை ஏற்படுத்தியுள்ளன.