நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருட்டு தொடர்பில் 16 இந்தியர்கள் உள்பட 27 பேர் கைது
நைஜீரியாவின் கடற்படை ஒரு வெளிநாட்டுக் கப்பலைக் கைப்பற்றி, நைஜீரியக் கடற்பரப்பில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு, அனுமதியின்றி கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 16 இந்தியர்கள் உள்பட 27 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக நைஜீரிய கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கொமடோர் அடெடோடன் அயோ-வாகன் கூறுகையில், "எண்ணெய் வளம் மிக்க நைஜர் டெல்டா பிராந்தியத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வெளிநாட்டவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று அவர் கூறினார்.
மேலும், "உரிமம் அல்லது அங்கீகாரம் இல்லாமல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் சில வெளிநாட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களில் 16 இந்தியர்கள் மற்றும் இலங்கை மற்றும் போலந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்த நாட்டவர்களும் அடங்குவர்.
திருட்டு மற்றும் பைப்லைன் சேதங்களால் நாள் ஒன்றுக்கு 470,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை நைஜீரியா இழக்கிறது. சமீப காலமாக பாதுகாப்புப் படைகள் குற்றவாளிகள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன" என்று அயோ-வாகன் கூறினார்.