எவ்வளவு வேலை செய்தாலும் துாக்கம் இரவில் வருகிறதில்லையா உங்களுக்கு.....?
மனித உடலுக்கு ஆரோக்கியம் வர முக்கியமாக தூக்கமும் அவசியம். சுமார் 30% மக்கள், ‘இன்சோம்னியா‘ என்ற இரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
அதிலும் சமீபகாலமாக, இளவயதினரும், நடுத்தர வயதினரும் அதிகளவில் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாகப் பல ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலை தொடர்ந்தால், இவர்கள் வரும்காலத்தில் பெரும் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூக்கமின்மை என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது பார்ப்போம்:
பொதுவாக நாம் நினைப்பது துாக்கம் ஓய்வைத்தரும் என்று, ஆனால் நிஜம் அதுவல்ல. நம் உடல் வளர்ச்சிக்குத் தூக்கம் மிகவும் முக்கியம். நம் உடலின் வளர்ச்சிக்குக் காரணமான ஹார்மோன்கள் (Growth hormone) நாம் நன்றாகத் தூங்கும்போது இரவில்தான் சுரக்கின்றன. இதன் காரணமாகவே 6-8 மணிநேரம் அவசியம் தூங்க வேண்டும் என்று பல வைத்தியர்கள் எடுத்துரைக்கிறார்கள்.
இரவு சரியாக தூங்கவில்லை என்றால் மறுநாள் காலையில் தலைவலி, கண்ணெரிச்சல், அசதி, கோபம், வேலையில் கவனச்சிதறல் போன்றவை ஏற்படுகிறது.
இந்த தூக்கமின்மை ஏற்பட ஒருவரின் உணவுமுறையும், வாழ்க்கைமுறையும்தான் முக்கிய காரணமாக அமைகின்றன.சரியான உடல் இயக்கம் இல்லாமல், மனதில் எதையாவது நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டு மனஅழுத்தம், மன உளைச்சலுடன் இருப்பதனாலும், தூக்கமின்மை ஏற்படுகிறது.
அதுபோன்று இரவு அதிக நேரம் டிவி, மொபைல் பார்த்துக் கொண்டிருப்பது, இரவு அதிகமாகச் சாப்பிட்டாலோ, அதிக காரம் உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டாலோ செரிமானக்கோளாறு, வயிற்று உப்புசம் போன்றவற்றாலும் கூட தூக்கமின்மை ஏற்படும்.
தூக்கமின்மை கோளாறு இருக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது:
தூக்கமின்மை என்பது நபருக்கு நபர் மாறுபடும். சிலருக்கு 4-5 மணி நேரம் நல்ல ஆழ்ந்து தூங்கினாலே மறுநாள் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். சிலருக்கு 7 மணி நேரம் தூங்கினால் போதுமானதாக இருக்கும்.
ஆனால், 6 மணி நேரம் தூங்கினாலும் சரி, ஒரு சிலருக்கு 9 மணி நேரம் தூங்கினாலும் சரி இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும் போல் தோன்றும். அவர்களுக்குத்தான் தூக்கமின்மை பிரச்னை இருக்கும். எனவே தூங்கி எழுந்த பின் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள், எவ்வளவு விரைவாக தூங்குகிறீர்கள், டீப் ஸ்லீப் எனப்படும் எவ்வளவு ஆழமாக, தொந்தரவுகள் இன்றி தூங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் நீங்கள் எவ்வளவு நன்றாகத் தூங்குகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
தூக்கமின்மை ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னவென்று பார்ப்போம்:
தொடர்ச்சியாகத் தூக்கப் பிரச்னை இருந்து அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருந்தால், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதயக் கோளாறு, உடல் எடை அதிகரிப்பு, உடலில் எண்டோகிரைன் சிஸ்டம் பாதிக்கப்படும்.
இது, நமது உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்பு ஏற்படுவது, தோல் சார்ந்த நோய்கள் உண்டாவது. உடல் கழிவுகள் அதிகரிக்கும். தூக்கமின்மை வாகன விபத்துகளை உண்டாக்கும். மேலும், பக்கவாதம் போன்ற மற்ற உடல்நலக் கோளாறுகளும் ஏற்படலாம். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி, ஹார்மோன் சுரப்பு பாதிக்கப்படலாம். எனவே, ஒவ்வொருவருக்கும் போதுமான அளவு தூக்கம் மிகவும் அவசியம்.
தூக்கமின்மையில் இருந்து விடுபட:
தூங்கும் அறை அமைதியாகவும், இருட்டாகவும் இருந்தால் நமக்கு. தினமும் மாலையில் துாக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. இரவு உணவிற்கு பிறகு சிறிது நேரம் நடை பயிற்சி மேற்கொள்ளலாம். இரவு தூங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே மிதமான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுதல், அத்துடன் இரவில் நீண்ட நேரம், டிவி, மொபைல் போன் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும், தூக்கத்தின் அவசியத்தை உணர்ந்து, யோகா, தியானம், நடைபயிற்சி போன்ற பயிற்சிகளை மேற்கொண்டால், ஆழ்ந்த உறக்கம் சாத்தியமே.