நகம் கடிப்பதனால் உண்டாகும் நோய்த்தொற்றுக்கள் மற்றும் தடுக்கும் முறைகள்.
நகங்களை கடிக்கும் பழக்கம் நிறைய பேருக்கு சிறுவயதிலேயே வந்து விடுகிறது. பொதுவாக நகம் கடிப்பது கெட்ட பழக்கமாகவும் தரித்திரம் என்றும் கூறுவதுண்டு.
டென்ஷனாகவோ, மனக்குழப்பத்திலோ இருந்தால் நகத்தை கடிக்கும் சுபாவமும் பலரிடம் இருக்கிறது. அப்படி நகங்களை கடிப்பது விரல்களுக்கு தீங்கு விளைவிக்கும். பல்வேறு தொற்றுநோய்களுக்கும் வழிவகுக்கும்.
நகங்களுக்கு அடியில் இருக்கும் பாக்டீரியாக்கள் தொற்று பாதிப்பை அதிகப்படுத்திவிடும். நகத்தை தொடர்ந்து கடிப்பதால் விரல்களில் வீக்கம் ஏற்படுவது, நகத்தின் தசைப்பகுதி சிவப்பு நிறத்திற்கு மாறுவது, சீழ்படிவது போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். அத்துடன் பற்களில் மற்றும் வாய்ப்பகுதியில் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
நீண்டநாட்களாக நகம் கடிக்கும் பழக்கத்தை தொடர்வது பற்களுக்கு பாதிப்பை அதிகப்படுத்திவிடும். பற்களில் கறைகளை உருவாக்கி இறுதியில் பற்களை சிதைத்துவிடும். பற்களில் விரிசலையும் ஏற்படுத்திவிடும். நகங்களை கடிக்கும்போது அதிலிருக்கும் துகள்கள் ஈறுகளுக்குள் சென்றடைந்து பல் வலி, வீக்கம், நோய்தொற்று போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். கடித்த நகத்தை விழுங்கிவிட்டால் வயிறுதொடர்பான பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.
நகப்பொலிஷில் டெனாடோனியம் பென்சோயேட் எனும் ரசாயனம் கலந்திருக்கிறது. அது கசப்பு தன்மை கொண்டது. அது நகம் கடிக்கும் எண்ணத்தை கட்டுப்படுத்த வழிவகுக்கும். பிடித்தமான பொருளை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். நகம் கடிக்க தோன்றும்போதெல்லாம் அந்த பொருளை கையில் வைத்து ரசிக்கலாம்.