நாட்டில் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான சக்திகளை ஆதரித்து வருகிறது
இந்தியாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பது முதல் ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத குழுக்களை ஆதரிப்பது வரை, நாட்டில் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான சக்திகளை ஆதரித்து வருகிறது என்று இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கும் அதன் மோசமான முயற்சியின் இதேபோன்ற சங்கிலியில், பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு-- ஐஎஸ்ஐ தமிழ்நாட்டில் இப்போது செயலிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளை புதுப்பிக்க முயற்சிக்கிறது என்று ஒரு அறிக்கையை இந்த செய்தித்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை செய்தி நிறுவனமான தி ஐலண்ட் ஒன்லைனின் அறிக்கையின்படி, தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் மறுதோற்றத்தை தூண்டுவதற்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ முயற்சித்து வருகிறது.
சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வழக்குகள் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இந்த வார தொடக்கத்தில் ஒன்பது பேரை கைது செய்த பின்னர் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போதைப்பொருள் மற்றும் ஆயுத விநியோகஷ்தரான ஹாஜி சலீமுடன் இணைந்து குணசேகரன் மற்றும் புஷ்பராஜா ஆகியோரால் கட்டுப்படுத்தப்படும் இலங்கை போதைப்பொருள் மாஃபியாவின் நடவடிக்கைகளே தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக இணையத்தளம் கூறுகிறது.
தென்னிந்தியாவில் பயங்கரவாதத்தை தூண்ட பாகிஸ்தான் முயற்சிப்பது இது முதல் முறையல்ல. 2014 இல், கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு முயற்சியை இந்திய உளவுத்துறை கண்டுபிடித்தது.
இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயம் தமிழ்நாட்டில் சில செயற்பாட்டாளர்களை கண்காணித்து வந்தது. அத்துடன் அவர்கள் தாக்குதலுக்காக பல இலக்குகளை உளவு பார்த்தது என்பதை அந்த நேரத்தில் இந்திய உளவுத்துறை கண்டுபிடித்தது.
இந்தநிலையில் பாகிஸ்தானிய உளவுச்சேவையான ஐ.எஸ்.ஐ போதைப்பொருள் விற்பனை மூலம் ஆண்டுக்கு 380 பில்லியன்கள் ரூபாய்களை ஈட்டுகிறது என்றும், இந்த பணத்தை பாகிஸ்தான் உளவுத்துறை பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதற்காக பயன்படுத்துகிறது என்றும் உளவுத்துறையின் ஆவணம் கூறுவதாக இந்திய செய்தி இணையம் தெரிவித்துள்ளது.