தமிழகம்- கோயம்புத்தூரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையின் மூலம் இலங்கைக்கு உள்ள தொடர்பு
தமிழகம்- கோயம்புத்தூரில் கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதியன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையின் மூலம் கோயம்புத்தூரின் மதத்தலம் ஒன்றுக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு தெளிவாகிறது என்று இந்திய புலனாய்வுச் சேவையான என்ஐஏ தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யபபட்டுள்ள முகமது அஸாருதீனுக்கு பிணைக்கோரி தாக்கல் செய்யப்பட்ட, மனுவை ஆட்சேபித்து, இந்திய தேசியப் புலனாய்வுப்பிரிவு கேரளா எர்னாகுள நீதிமன்றில் இந்த காரணங்களை வெளியிட்டது.
இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பில் அஸாருதீன், கேரளாவில் இஸ்லாமிய அரசின் அங்கத்தவரான முகமது நௌஷன் என்பவருடன் கலந்துரையாடியதாக தேசியப்புலனாய்வுப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது, முகமது அசாருதீன் ஒரு பெரிய தாக்குதல் திட்டத்தைப் பற்றி அவருடன் பேசியுள்ளார் என்றும் புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.
அசாருதீன் கோயம்புத்தூரில் உள்ள ராயன் பள்ளிவாசலுக்கு அடிக்கடி வருபவர் என்றும் அங்கு வைத்தே அவர்;, ஏனைய குற்றம் சுமத்தப்பட்டவர்களை சந்தித்து தென்னிந்தியாவில் தாக்குதல்களை மேற்கொள்ள ஆட்சேர்ப்பில் ஈடுபட்டார் என்றும்; நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அவர், சஹ்ரான் ஹாசிம் உட்பட்டவர்களின் தீவிரவாதப் பேச்சுக்கள் அடங்கிய காணொளிகளை பரப்பி வந்ததாகவும் இந்திய புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவரும், தற்கொலைப் படைத் தீவிரவாதியுமான சஹ்ரான் ஹாஷிம், தமிழகத்தில் ஜிஹாத்துடன் தொடர்புகளை பேணி வந்துள்ளார்.
பல ஆண்டுகளாக, அவர் இந்தியாவுக்கு பயணித்து, குறிப்பாக தமிழ்நாட்டில் ஏராளமான இந்திய முஸ்லிம்களை தீவிரமயமாக்கினார் என்றும் இந்திய தேசிய புலனாய்வுப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.